சென்னைக்கு வருகை தந்த சாய்பாபாவின் பாதுகை!
இறைவனை தரிசிக்கும்போது திருவடி தொடங்கி திருமுடி வரை தரிசிக்க வேண்டும் என்பார்கள். இறைவனின் திருவடிகளுக்கு அத்தனை உயர்வு; அத்தனை பெருமை! திருவடிகளை அலங்கரிக்கும் பாதுகைகளின் மகிமையை விவரிக்க முடியாது. தீட்சைகளிலேயே திருவடி தீட்சைதான் மிகவும் உயர்வானதாகச் சொல்லப்படுகிறது. பாதுகைகளின் மகிமையை உணர்ந்ததால்தான் போலும், பரதன் ஶ்ரீராமபிரானின் பாதுகைகளை தலையில் தாங்கிச் சென்று அரியாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தான்.
மகான்களின் பாதுகைகளைத் தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கிறதென்றால், நாம் பாக்கியசாலிகள்தான். அந்த வகையில் சென்னைவாழ் மக்களுக்கு அத்தகைய பாக்கியம் கிடைத்திருக்கிறது.நம்பிய அடியவர்களைக் காக்கும் கண்கண்ட தெய்வமாம், ஸ்ரீ சாய் பாபா மஹாசமாதி அடைந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. எனினும் அந்த மகானின் அருள்சக்தி நாள்தோறும் பல்கிப்பெருகி அடியவர்களைக் காத்து வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஷீரடி ஶ்ரீசாய்பாபாவின் ஆலயம் 1952-ம் ஆண்டு முதலே சாய்பக்தர்களுக்கு அருள்நிறைந்த சரணாலயமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு சாய்பாபாவின் மஹாசமாதி நூற்றாண்டு என்பதை முன்னிட்டு இந்த ஆலயம் பல சிறப்பான வழிபாடுகளையும், உற்சவங்களையும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஷிரடி சாய் பாபாவின் சந்நிதானத்தில் உள்ள ஸ்ரீ சாய்பகவானின் திருப்பாதுகைகளைச் சென்னைக்கு எழுந்தருளச் செய்து பக்தர்களின் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கண்ணாடிப்பேழைக்குள் இருந்த பகவான் சாய்பாபாவின் பாதுகைகளை வணங்கிய பக்தர்கள் சிலர் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதனர். 'சாய்பகவானின் திருவடிகளைத் தாங்கிய பாதுகைகளைத் தரிசிக்க என்ன தவம் செய்தோமோ' என்று அவர்கள் கண்ணீர் சிந்தினர். வெளியே வானமும் தன் பங்கிற்கு நீர் மலர் தூவி வரவேற்பை அளித்துக்கொண்டிருந்தது.
மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கற்பகாம்பிகை மண்டபத்தில் இந்தத் திருப்பாதுகைகள் தரிசிப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும். காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று தரிசிக்கலாம். நாளை இரவு 7 மணிக்கு மேல், இந்தத் திருப்பாதுகைகள் மயிலாப்பூர் மாடவீதிகளில் அலங்காரமாக ஊர்வலம் கொண்டு செல்லப்படும். பின்னர் மீண்டும் ஷீரடி ஆலயத்துக்கு உபசாரங்களுடன் அனுப்பிவைக்கப்படும். காணக்கிடைக்காத அரிய பொக்கிஷம் சாய்பகவானின் திருப்பாதுகைகள், அது நம்மருகே வந்து இருப்பது உண்மையிலேயே நாம் செய்த பாக்கியம்தான்.
Leave a Comment