வைரத்தேரில் வலம் வந்த திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி...


மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 7:45 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம், திருமங்கலம் கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மேலும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பாதையாத்திரை ஆக வந்தடைந்தனர். அவர்கள் இன்று காலையில் தேரோட்டம் விழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர் இந்த சிறிய வைர தேரானது  ரத வீதிகளில் மட்டும் உலா வந்தது.

முன்னதாக சுப்ரமணியசாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வைர தேரில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடிக்க ரத வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது கண்கொள்ளாக் கட்சியாக இருந்தது.

தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் கோயிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக திருவண்ணாமலை பகுதியில் இருந்து வல்லுனர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

தொடர்ந்து இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.



Leave a Comment