அம்பிகை கடைபிடித்த கார்த்திகை தீப விரதம்....


முன்னொரு காலத்தில் தாரகாசுரன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவனுக்கு கமலாட்சன், தாரகாட்சன், வித்தியுன்மாலி என்று மூன்று புதல்வர்கள் இருந்தனர். `திரிபுராசுரர்’ என்று அழைக்கப்படும் இந்த மூவரும் பிரம்மனை நோக்கித் தவம்புரிந்தனர். பிரம்மனிடம் சாகா வரம் தரும்படி வேண்டினர்.

பிரம்மன் கொடுத்த வரம்
சிவபெருமானைத் தவிர அனைவரும் ஒருநாள் இறந்தே தீர வேண்டும். எனவே, சாகா வரம் கிடைக்காது என்றார் பிரம்மா. `அப்படியானால் இரும்பு, பொன், வெள்ளியாலான மூன்று நகரங்களும், அவை நாங்கள் விரும்பியபடி பறக்கவும், வேண்டிய இடத்தில் இறக்கவும் வேண்டும், சிவபெருமான் நேரில் வந்து அழித்தாலொழிய, வேறு எவராலும் அழியக் கூடாது என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றனர்.

சிவனின் கோபம்
முப்புரங்களைப் பெற்றதால், அவர்களின் கர்வம் தலைக்கேறியது. அசுரர்கள் பலத்தோடு அனைத்தையும் அழித்தனர். அச்சமடைந்த மக்களும் தேவர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். சிவபெருமான் பூமியை ரதமாகவும், சந்திரனை தேர்ச் சக்கரமாகவும், நான்மறைகளைக் குதிரைகளாகவும், மேரு மலையை வில்லாகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு திரிபுரம் எரிக்கப் புறப்பட்டார்.

திரிபுரத்தை நோக்கி, தம் வில்லை வளைத்து நாணை ஏற்றினார். ஆனால், கணையைத் தொடுக்காமல், பார்த்துவிட்டு புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்த மாத்திரத்தில், முப்புரங்கள் தழலென எரிந்து சாம்பலாயின. அத்தனை அரக்கர்களும் கார்த்திகைப் பெளர்ணமி அன்று மடிந்தனர். இதனையறிந்த தேவர்களும் மக்களும் மகிழ்ந்தனர். அந்த நாளே திருகார்த்திகை தீப நாளாகும்.

ஒருமுறை அம்பிகை தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள, கார்த்திகை தீபம் ஏற்றிவைத்து, விரதமிருந்து, சிவபெருமானின் பேரருளால் தோஷத்தைப் போக்கிக்கொண்டாள் என்று தேவி புராணம் கூறுகிறது. திரிசங்கு, கிருத்திகை விரதம் கடைபிடித்து பேரரசனானான். பகீரதன், கார்த்திகை விரதம் கடைப்பிடித்து, தான் இழந்த நாட்டை மீண்டும் திரும்பப் பெற்றான் என புராண கதைகள் கூறுகின்றன.



Leave a Comment