திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய சஷ்டி விழா...


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்  இரண்டாம் படை   வீடான திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்  நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான   புகழ் பெற்ற கந்த சஷ்டி திருவிழா  யாகசாலை பூஜையுடன் இன்று காலை துவங்கியது.

இதனை   முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் சுவாமி  ஜெயந்திநாதர் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து காலை 07-00 கோவில் நிர்வாகத்திடம் இருந்து தாம்பூலம் பெறப்பட்டு  யாகசாலை பூஜைகளுடன் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக  துவங்கியது .

 இதனைத் தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து விரதம் இருக்க துவங்கினர். மேலும் விரதம் இருக்ககூடிய பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் 21 இடங்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி விரதம் இருக்க தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வருகிற பதினெட்டாம் தேதி நடைபெறுகிறது.



Leave a Comment