திருவிளக்குத் துளிகள்!


 

கார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்கள்!

உலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள்.

எந்த ஒரு பிரார்த்தனையும், தபசும், யாகமும், பூஜையும் விளக்கு இல்லாமல் முழுமை அடையாது. ஏனென்றால் பஞ்சபூதங்களில் ஒன்றான இந்த உலகில் உள்ள எந்த ஒரு சக்தியையும் ஆண்டவனிடம் எடுத்துச் செல்லும் ஆற்றல், சக்தி விளக்கிற்கு உண்டு. விளக்கு ஒன்றே மேல் நோக்கி எரியக்கூடியது. ஒரு விளக்கு எத்தனை ஆயிரம் ஒளியை ஏற்றினாலும் தன் ஒளியை இழப்பது இல்லை. தோஷங்களை நீக்கும் சக்தி விளக்குக்கு உண்டு.

திருக்கார்த்திகை தீபம்: கார்த்திகைத் திங்களில் கொண்டாடப்படும் தீபத்திருநாளே திரு விளக்கின் சமயத்தொடர்பை விளக்கும். அக்னி தலமான திருவண்ணாமலையில் மலை தீபம் ஏற்றப்படுவதும் திருக்கார்த்திகை தினத்தில்தான். கார்த்திகைப் பெண்கள் குழந்தை முருகனை எடுத்து வளர்த்ததால் கிருத்திகை முருகனுக்கு உரிய நடசத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. கிருத்திகை தினத்தில் எல்லா ஆலயங்களிலும் தீபத்திருநாள் நடைபெறும். ஐப்பசி, கார்த்திகை மாதம் மழைக் காலம். இந்தச் சூழலில்தான் அதிகமான பூச்சிகள், நோய்க் கிருமிகள் பரவும். இதனைப் போக்கத்தான் அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் வீட்டின் முன் வாசலிலும், புழக்கடையிலும் விளக்கேற்றி வைப்பர். பூச்சிகள் விளக்கு சுடரில் பட்டு இறந்துவிடும். 

 

விளக்கும், பெண்ணும்: பழங்காலம் முதல் பெண்தான் விளக்கேற்ற வேண்டும் என்கிறார்கள். திருமணமாகிப் பெண் முதன் முதலில் வீட்டுக்கு வந்தவுடன் விளக்கேற்றச் சொல்கிறோம். வெளிச்சத்தைக் கொண்டு வரும் அடிப்படை ஆதாரம் விளக்கு. இருளைப் போக்கும் பொருள். பெண் குடும்பத்தின் விளக்காக இருக்கிறாள். எனவே பெண்கள்தான் விளக்கேற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னொரு காரணம், ஒரு பெண்ணுடைய சிக்கனக் குணம், கையாளும் தன்மை, பதற்றமற்ற நிலை, நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முறையைக் கவனிக்கவும், கற்றுக் கொடுக்கவும்தான். குடும்பத்தில் என்றென்றும் ஒளி பிறக்கச் செய்கிற பொறுப்பு, கடமை, அவளிடம் உள்ளது என்பதைக் குறிக்கத்தான். 

தீபம் ஏற்றும் நேரம்: தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாகக் கருதப்படுவது, அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயத்திற்கு முன்), மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையும்தான் (சூரிய அஸ்தமத்திற்குப் பின்).
காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் வெற்றி பெறும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளையில் தீபமேற்றினால் திருமணத் தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதிகம். மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். 

விளக்கு குளிரவைத்தல்: விளக்கை எக்காரணத்தைக் கொண்டும் வாயால் ஊதி அணைக்கக் கூடாது. கையால் வீசியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தைக் கொண்டும் குளிரவைக்கக் கூடாது. புஷ்பத்தை நெருப்பில் கருக்கக்கூடாது. திரியை உட்பக்கமாக இழுத்துக் குளிரவைப்பதே நன்மை தரும். 

விளக்கு துலக்க உகந்த நாட்கள்: குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்குக் காரணம், திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கைக் கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதிகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்க நிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

திருவிளக்குத் துளிகள்: 

* வாரம் ஒருமுறையாவது விளக்கைக் குறிப்பிட்ட தினத்தில் துலக்க வேண்டும்.
* திருவிளக்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து பொட்டிட்ட பிறகே விளக்கு ஏற்ற வேண்டும்.
* விளக்கில் குளம் போல் எண்ணெய் இருக்க வேண்டும். 
* எக்காரணம் கொண்டும் தெற்கு முகமாக விளக்கு ஏற்றக்கூடாது.
* வீட்டில் காலை மாலை விளக்கேற்றுவதால் சகல நன்மைகளும் கிட்டும். 
* அகல் விளக்கு ஏறுவதற்கு மண் அகல் விளக்கே விசேஷம். 
திருவிளக்கின் முக்கியத்துவம் அறிந்து, முறையாக விளக்கேற்றி, பகவானின் பூரண அருளைப் பெறுவோம்.



Leave a Comment