வீட்டில், வறுமை ஓழிக்கும் ஐப்பசி மாத சிறப்புகள்....


ஐப்பசி மாதம், 7வது மாதமாகும்.சூரியன்,  துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம், அதனால், இதற்கு துலா மாதம் எனப் பெயர். மேலும், இம்மாதத்தில், அஸ்வினி நட்சத்திரத்தில், பவுர்ணமி வருவதால், இதற்கு அஸ்வினி மாதம் என பெயர். இதுவே ஐப்பசி மாதமாயிற்று.
 
பொதுவாக பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது மரபு. இருப்பினும் ஐப்பசி மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு உபேந்திரன் என்றும் பெண் குழந்தைகளுக்கு சந்திரவதி என்றும் பெயர் வைக்கலாம்.

ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும், காவேரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது, காவேரியில் நீராடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்தால், அனைத்துவிதமான பாவங்களும் நீங்கும்.

இம்மாதத்தில்,தேய்பிறையில் வரும் துவாதசி, கோவத்ச துவாதசி ஆகும். அன்றைய தினம்,  மாலை நேரத்தில் பசுவையும், கன்றையும்,  உணவு கொடுத்து, பூஜித்து வழிபட்டால், வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

இம்மாதத்தில், தேய்பிறையில் வரும் திரயோதசி, கிழமை தனத் திரயோதசி ஆகும். இன்று விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது சிறப்பு.. இதனால் பொருள் பணம் சேர்க்கை உண்டாகும். மேலும், தன்வந்திரியை பூஜித்து வழிபட்டால், அனைவரும் நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.

ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி நரக சதுர்தசி. அன்றைய தினம் தீபாவளி பண்டிகை. . இந்த நாளன்று கிருஷ்ணர், நரகாசுரனை கொன்று, மக்களை காத்தமைக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இன்று காலை எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கிருஷ்ணர் பூஜையும் லட்சுமி குபேர பூஜையும் செய்வது சிறப்பு. மஹா லட்சுமியின் அருளினால் செல்வ வளம் சிறக்கும்.

தீபாவளிக்கு மறுதினம், கேதார கௌரி விரதம்.  இன்று அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் குழப்பங்கள் பூசல்கள் நீங்கும்.

இம்மாதத்தில் வளர்பிறையில் வரும் துவிதியை, எமத் துவிதியை ஆகும். இன்று சகோதர சகோதரிகள் ஒன்று கூடி, சகோதரியின் வீட்டில் விருந்து உண்டு, மன மகிழ்ச்சியுடன் பரிசுகள் பரிமாறிக் கொள்ள வேண்டும். இதனால் குடும்பத்தார் அனைவரும் தீர்க்க ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

இம்மாதத்தில், வளர்பிறை சஷ்டி, கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இன்றைய நாள், சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த நாள். பல கோவில்களில், சூரசம்ஹாரம் நடக்கும். இம்மாதத்தில் வரும் பவுர்ணமியின்று, சிவன்கோவில்களில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடக்கும். இந்த விழாவில் பங்கேற்றால், வீட்டில், வறுமை ஓழியும்.



Leave a Comment