அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்த விழா...


அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள பந்தக்கால் முகூர்த்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

ஊர்காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 14ம் தேதி தொடங்கி 17 நாட்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலத்திலிருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள்.

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் வரும் நவம்பர் 26ம்தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும்.

அண்ணாமலையார் கோவில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து பஞ்ச முக தீப ஆராதனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வந்த கால் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வந்து ராஜகோபுரம் எதிரே பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment