ஐப்பசி பௌர்ணமியில் சந்திரனின் சிறப்பு!
ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில், சுத்தமான அன்னத்தினைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.
தட்சன் என்பவனுக்கு 27 பெண்கள். அவர்கள் அனைவரையும் சந்திரன் மணம் முடித்துக் கொண்டான். ஆனால் அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அவன் அதிக காதலுடன் இருந்தான். இதுபற்றி மற்ற பெண்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர். திருமணம் செய்து கொடுக்கும்போது, அனைத்து பெண்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியிருந்த வார்த்தை சந்திரன் மீறிவிட்டதாக கருதிய தட்சன், சந்திரனுக்கு சாபம் கொடுத்தான்.
இதனால் சந்திரன் கலை இழந்து தேயத் தொடங்கினான். அதன்பிறகு சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும். சந்திரனின் சாபம் தீர்ந்ததற்காகவா நாம், ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.
ஈஸ்வரன் சூரிய வடிவம், அம்பாள் சந்திர வடிவம் என்கிறது வேதம். இதனால் சந்திரனின் தானியமான நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசி, அம்பாள் அம்சம் என்றாகிறது. நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவமாகத் திகழும் அம்பாள், ஈசனைகிறச் சேரும் நாள் ஐப்பசி அன்னாபிஷேக நாளாக அமைகிறது.
அன்னம் ஈசனின் வடிவம். உற்றுப்பார்த்தால், ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கமாகவே காட்சி தரும். அன்னம் ஈஸ்வர ஸ்பரிசம், ஒவ்வொரு முறை அன்னத்தைத் தொடும்போதும் நீங்கள் அந்த இறைவனைத் தொடுகிறீர்கள் என்று உணருங்கள். சந்திரனை சூடிக்கொண்ட சிவபெருமான் பௌர்ணமி தினத்தில் அமிர்த கலை, அதாவது சந்திரனின் 16 கலைகளோடு கூடி பூரண மகிழ்ச்சியோடு இருப்பார். இதனாலேயே சிவபெருமானுக்கு உரிய தினமாக பௌர்ணமி உள்ளது. அதிலும் புண்ணியம் தரும் துலா மாதமான ஐப்பசியில் வரும் பௌர்ணமி தினத்தில் சிவபெருமான் ஆனந்த நிலையில் யோகத்தில் ஆழ்ந்திருப்பார். அந்த நாளில் அவருக்குச் செய்யப்படும் அன்னாபிஷேகம் அபிஷேகங்களில் எல்லாம் உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது.
சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
Leave a Comment