திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து வந்த ஆண்டாள் சூடி கொடுத்த மாலை....


திருப்பதி ஏழுமலையான் கோயில் மோகினி அலங்காரத்திற்காக ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து வந்த  ஆண்டாள் சூடி கொடுத்த மாலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
 
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 18 தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தொறும் காலை இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா  வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நாளை காலை மோகினி அலங்காரமும், முக்கிய வாகன சேவையான கருட சேவை இரவு நடைபெறவுள்ளது. இதையொட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடி கலைத்த கிளியுடன் கூடிய மாலை இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது.

ஆண்டாள் மாலைக்கு ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தில் வைத்து தமிழக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துறை  முன்னிலையில் ஜீயர்கள் தலைமையில்  சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினர். பின்னர் ஊரவலமாக   யானைகள் அணிவகுத்து முன் செல்ல நாதஸ்வர வாத்தியங்களுக்கு மத்தியில் ஆண்டாள் மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான் கோயில் அதிகாரிகளிடம்  வழங்கப்பட்டது.

இதில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அதிகாரி முத்துராஜா, ஸ்தலத்தார்  ரங்கராஜன், டிரஸ்ட்டி  மனோகரன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாலை நாளை காலை ஏழுமலையானுக்கும், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளும் மலையப்ப சுவாமி கிளியுடன் கூடிய மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.



Leave a Comment