திருப்பதி பிரம்மோற்சவ கொடியேற்றத்திற்காக தயார் செய்யப்பட்ட தர்பை பாய், கயிறுக்கு சிறப்பு பூஜை


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றத்திற்காக வனத்துறையின் சார்பில் தயார் செய்யப்பட்ட தர்பை பாய் மற்றும் கயிறுக்கு சிறப்பு பூஜை.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது கருடாழ்வார் கொடி ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் தர்பை பாய் மற்றும் கயிறு வராக சுவாமி பக்தர்கள் ஓய்வறை அருகே உள்ள தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து தேவஸ்தான வன அதிகாரி  சீனிவாஸ் மற்றும் ஊழியர்களால் ஊரவலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் பெரிய சேஷ வாகனத்தின் மீது தர்ப்பையால் செய்யப்பட்ட பாய் மற்றும் கயிறு வைக்கப்பட்டது.  இவை திங்கட்கிழமை கொடியேற்றத்தில் பயன்படுத்தப்படும்.

பிரம்மோற்சவம் தொடக்கத்தை முன்னிட்டு கொடியேற்றம் செய்யப்படுகிறது.  கொடிமரத்தில் கருட கொடி ஏற்றபடுவதன் மூலம் முக்கோடி தேவதைகளை பிரம்மோற்சவத்திற்கு அழைக்கும் விதமாக செய்யப்படுகிறது.  ருத்விக்குகள் வேத மந்திரங்கள் பாராயணம் செய்தபடி கொடிமரத்தைச் சுற்றி தர்பை பாயை கொடி மரத்தில் தர்பை கயிறால் கட்டப்படுகிறது. இதற்காக தேவஸ்தான வனத்துறையினர் 10 நாட்களுக்கு முன்பே பணிகளை மேற்கொண்டனர்.

சிவ தர்பை மற்றும் விஷ்ணு தர்பை என இரண்டு வகையான தர்பைகள் உள்ளன. திருமலையில் விஷ்ணு தர்பை பயன்படுத்தப்படுவதால் தேவஸ்தான வனத்துறை அதிகாரிகள் திருப்பதி மாவட்டம், ஏர்பேடு மண்டலம் செல்லூரில் இருந்து இந்த தர்பை  சேகரித்து  உலர் வெயிலில் ஒரு வாரம் காயவிட்டு முழுமையாக சுத்தம் செய்து பாய் மற்றும் கயிறாக தயாரிக்கப்படுகிறது.கொடி ஏற்றுவதற்கு 22 அடி அகலம் 7 அடியில் கொண்ட பாய் மற்றும் 200 அடி நீளமுள்ள தர்பை கயிற்றை தயார் செய்துள்ளனர். இதில் நிகழ்ச்சியில் கோயில் துணை இ.ஓ. லோகநாதம், வி.ஜி.ஓ. பாலிரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Leave a Comment