வழுக்கு மரம் ஏறி பூஜை பொருட்கள் எடுத்து வந்து பூஜை செய்யும் 18 கிராம மக்கள்...
சிவகங்கை மாவட்டம் ஏரியூர் அருகே சென்றாய பெருமாள், திம்மராய பெருமாள் எதிர் சேவையின் போது வழுக்கை மரத்தின் மீது கட்டி வைக்கப்பட்டுள்ள பூஜை பொருட்களை இளைஞர்கள் ஒன்றிணைந்து மரம் ஏறி எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
ஏரியூர் அருகே ஏர்கோல் பட்டி பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திம்மராய பெருமாள் மற்றும் பூச்சியூர் சென்றாய பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. பழைய காலம் முறைப்படி அண்ணன் சென்ராயப்பெருமாளும், தம்பி திம்மராயப்பெருமாளும் ஆண்டு தோறும் ஆவணி மாதம் திருவிழாவில் எதிர் சேவை கொண்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் பூச்சியூர், ஆலமரத்தூர், காட்டு மோட்டூர், ஆரல் குந்தி, ஏர்கோல்பட்டி, சித்திரப்பட்டி, நரசிம்மேடு, சின்னக்கானூர் காடு, மட்டக்கல் உள்ளிட்ட 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நிகழ் ஆண்டிற்கான திருவிழா புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் நடத்தி வந்தனர்.
விழாவில் சென்றாய பெருமாள், திம்மராயப் பெருமாள் சுவாமிகள் 18 கிராமத்திற்கு சென்று பால், தயிர், திருநீர், நெய், பழங்கள், பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனைகளுடன் பக்தர்களுக்கு பள்ளத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள், திம்மராயப் பெருமாள் சுவாமிகள் அருள் பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான அண்ணன், தம்பி எதிர் சேவை வியாழக்கிழமை ஏர்கோல் பட்டி பகுதியில் நடைபெற்றது.
இதில் ஊர்வலமாக எடுத்த வரப்பட்ட சென்றாயப்பெருமாள், திம்மராயப் பெருமாள் சுவாமிகள், பஞ்சபாண்டவர்களான பீமன், அர்ஜுனன், நகுலன், திரௌபதி அம்மன், சகாதேவன், போர் மன்னன், பிராமணர் உள்ளிட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் வளாகத்தில் எதிர் சேவைக்காக வைக்கப்பட்டிருந்தது.
அப்போது பழங்கால முறைப்படி எதிர்சேவையின் போது பூஜை செய்யப்படும் பொருட்கள் கோயில் வளாகத்தில் நட்டு வைக்கப்பட்டிருந்த வழுக்க மரத்தின் மீது இருந்த நிலையில், இளைஞர்கள் ஒன்றிணைந்து 50 அடி நீளம் கொண்ட வழுக்க மரத்தின் மீது ஏறி பூஜை பொருட்களைக் கொண்டு வந்து எதிர்சேவை நிகழ்வினை பூஜை செய்து தொடங்கி வைத்தனர். இதில் 18 கிராம ஊர் முக்கியஸ்தர்கள், கோயில் நிர்வாகிகள், கட்டளைதாரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Leave a Comment