மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா - சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும், சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.

அதன்படி இந்த ஆண்டிற்கான சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சிவபெருமானின்  லீலைகளை எடுத்துக்கூறும் வகையிலான நாள்தோறும் ஒவ்வொரு லீலைகள் நடைபெற்று அதன் பின்னர் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்றுவருகிறது.  

இதையடுத்து  சிவபெருமான் நிகழ்த்திய மாணிக்கம் விற்றது, நாரைக்கு மோட்சம் அளித்தது , பொற்கிழி அளித்தது போன்ற சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஆடி வீதியில் தினமும் நிகழ்த்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில் 7-ம் நாளான  காலை சிவபெருமான் வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் எழுந்தருளி சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்.

இதையடுத்து  ஆவணி மூலத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம், கோவிலில் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில்  நடைபெற்றது. அதில் சுவாமியிடமிருந்து செங்கோலை பெற்று அவரது பிரதிநிதியாக கோவில் அதிகாரி சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வலம்வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பித்ரார்.

இதை தொடர்ந்து இன்று முதல் சுந்தரேசுவரர் ஆட்சி 8 மாதங்களுக்கு நடைபெறும் என்பது ஐதீகம். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Leave a Comment