தோஷங்களை நீக்குவது தான் பிரதோஷ வழிபாடு!
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.
பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம். எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார். ஈசனை வணங்குவது மட்டுமல்லாமல் நந்தியின் வழிபாடு பிரதோஷத்தின் பொது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நந்தி தேவருக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத் - என்றால் துக்கம். ரன் - என்றால் ஓட்டுபவன். ருத்ரன் - என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள் ஆகும். நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது. பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள். எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.
தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. இதனால்தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார். புரிந்துவிட்டதா? இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள். அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும்.
பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.
Leave a Comment