முருகப்பெருமானுக்கு உகந்த ஆடி கிருத்திகை!
முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை போன்றவை மிகவும் முக்கியம் வாய்ந்த விழாக்களாக கருதப்படுகிறது.
எல்லா மாதங்களிலும் கிருத்திகை வரும். ஆனால் ஆடிக்கிருத்திகை போன்ற சிறப்பு தை மாதக் கிருத்திகையில் கூட இருக்காது. அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றில் ஆடி கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை வீதிஉலா என விமரிசையாக நடைபெறும்.
இது தேவர்களின் மாலை காலம். எனவே, இக்காலத்தில் உப்பில்லா உணவை எடுத்துக்கொண்டு கார்த்திகை விரதம் இருந்தால் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.
நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
Leave a Comment