ஊத்துக்காடு எல்லையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா...
பூந்தமல்லி குமணன்சாவடி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று தீ மிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் ஆடித் திருவிழா கடந்த மாதம் 28-ம்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவையொட்டி அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
7ம் நாள் திருவிழாவன்று 1008 பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு எல்லையம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. 10ம் நாள் திருவிழாவான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து உற்சவர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாள்தோறும் வானவேடிக்கை, இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், திருவேற்காடு, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். முன்னதாக பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் பூவை ஜெயக்குமார், ரவிக்குமார் தலைமையில் 3 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் பூவை ஞானம், நிர்மலா ஞானம் தலைமையில் விழாக்குழுவினர், உபயதாரர்கள், ஊர்ப்பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
Leave a Comment