அம்மன் வழிபாட்டுக்கும் உகந்த ஆடி பௌர்ணமி !


ஆடி மாதம் பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் வழிபாட்டுக்கும் உகந்த அற்புதமான நன்னாள். அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால், குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடிகொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்!

அதேபோல், ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம். எனவே ஆடி பௌர்ணமி நாளில், ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள். கல்வியும் ஞானமும் கிடைத்து, சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழலாம்!

பொதுவாகவே பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பது விசேஷம். குறிப்பாக, ஆடியில், செவ்வாய்க் கிழமை தோறும் சுமங்கலிகள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தை அனுஷ்டித்து பிரார்த்தித்துக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்து அளிப்பார்கள்.

 



Leave a Comment