சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா நடந்தது. நடராஜர், சிவகாமசுந்தரியுடன் நடனம் ஆடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதைத்தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது. அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைத்து 4 மாட வீதிகளையும் வலம் வந்தது. பின்னர் நேற்று இரவு தேர் நிலைக்கு வந்தவுடன் சுவாமி ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு லட்சார்ச்சணை நடந்தது.
இந்நிலையில் இன்று காலை மகா அபிஷேகம் நடந்தது. ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி ஆயிரங்கால் மண்டபத்தின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு பல்வேறு பூஜைகள், அர்ச்சனைகள் நடந்தது.
கோயிலின் உள்ளே சித்சபையில் ரகசிய பூஜையும் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு திருவாபரண அலங்காரமும், அர்ச்சனைகளும் நடந்தது. இதைத்தொடர்ந்து நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனமாடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடராஜர், சிவகாமசுந்தரியை வணங்கினர்.
பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி கோயிலின் உள்ளே சித்சபைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தக் கோயில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர். திருவிழாவினையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
Leave a Comment