சிவன் நடனமாடும் திருவாலங்காடு...
சிவபெருமானுக்கும் காளிக்கும் ஒருமுறை நடனப் போட்டி நடைபெற்றது. போட்டி உச்சகட்டத்தை எட்டிக்கொண்டிருந்தது. காளியின் கையே ஓங்கியிருந்த நிலையில் சிவனின் காதில் இருந்த தோடு திடீரென கழன்று விழுந்தது. சிவன் நடனமாடியபடியே அதனை தனது இடது கால் விரல்களால் பற்றி எடுத்து காதில் அணிந்துகொண்டார். இவ்வாறு காலை உடம்புடன் ஒட்டியபடி தலை வரை தூக்கி ஆடும் நடனம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். பெண்ணான காளியால் இவ்வாறு ஆட முடியாததால் போட்டியில் சிவனிடம் தோல்வியுற்றார். இந்த போட்டி நடந்த இடம் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு. இங்கு சிவனுக்கும், காளிக்கும் தனித்தனியாக கோவில்கள் இருக்கின்றன.
காரைக்கால் அம்மையார் சிவனைத் தரிசிக்க திருவாலங்காட்டிற்கு வந்தபோது, அந்த இடம் முழுவதுமே சிவன் ரூபமாக காட்சியளித்ததால் கால் வைக்கத் தயங்கி, தலையால் நடந்து வந்து சிவனை வழிபட்டதாகவும் ஒரு கதை உண்டு. காரைக்கால் அம்மையார் இந்த தலத்தில்தான் முக்தி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கோவிலில் காரைக்கால் அம்மையாருக்கும் ஒரு சந்நிதி உள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவன் வடாரண்யேசுவரர், ஊர்த்துவ தாண்டவர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டு அப்பர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் வண்டார் குழலம்மை.
கிழக்கு நோக்கி இருக்கும் இந்த கோவிலின் 5 நிலை ராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் உள்ள சந்நிதியில் வள்ளி, தெய்வானையுடன் அருள்மிகு சண்முகர் எழுந்தருளியுள்ளார். நுழைவு வாயிலைத் தாண்டியதும் பலி பீடம், கொடி மரம், நந்தி மண்டபம் மற்றும் 3 நிலைகளையுடைய இரண்டாவது கோபுரம் காட்சியளிக்கிறது. இதிலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் இரண்டாவது சுற்றுப் பிரகாரம் வருகிறது. வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில். இந்த வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன. இதில் இத்தலம் ரத்தின சபை என்றும், இதுவே முதன்மையான சபை என்றும் குறிக்கப்பட்டுள்ளது. நேரே உள்ளே சென்றால் கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்கிறது இந்த கோவிலின் தலப் புராணம். இத்தலத்தில் உள்ள உற்சவர் நடனமாடியபடி காட்சியளிப்பதால் ரத்தின சபாபதி என்று அழைக்கப்படுகிறார்.
நடராஜர் சந்நிதிக்கு மேல் தாமிரத்தினால் விமானம் வேயப்பட்டுள்ளது. நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி உள்ளது. இந்த தலத்தின் பெருமையை அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். கோவிலுக்கு வெளியே மிகப்பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் காளிக்கென தனிக்கோவில் உள்ளது. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இறங்கியும் கோவிலுக்கு வரலாம். பேருந்து வசதியும் உண்டு.
தமிழக சரித்திரத்தின் முக்கியமான பகுதிகளை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்துள்ளன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த 22 செப்பேடுகள் சோழ வரலாறு குறித்து பல அரிய தகவல்களைச் சொல்கின்றன. இவை தற்போது சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
Leave a Comment