நந்தி பகவானுக்கு நந்தி என்ற பெயர் எவ்வாறு வந்தது ?


சிவ வணக்கம் தோன்றிய நாளிலிருந்தே, நந்தி என்பது சிவனது பெயராக இருந்து வருகிறது. அது 'ஆனந்தி' என்ற சொல்லின் சிதைவு ஆகும். 'ஆனந்தி' என்ற சொல் ஆனந்தத்தைச் செய்பவனாகிய சிவபெருமானைக் குறிக்கும். 'நந்தினி' என்ற சொல் அம்மையைக் குறிக்கும்.

காளைமாடு' என்ற பொருளில் நந்தி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். அக்கால மக்களின் வாணிபத்தில் பேருதவி புரிந்து வந்தது எருது ஆகும். எனவே அது வணக்கத்திற்குரிய விலங்காக மாறிவிட்டது.

நந்தி என்றால் நாகம் என்ற பொருளும் உண்டு. பாம்பை அணிந்தவன் சிவபெருமான் என்ற பொருளிலும் நந்தி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் நந்தி என்ற சொல் 'நந்துதல்' என்ற வினைச் சொல்லில் இருந்து வருகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால் நந்துதல் என்ற சொல்லிற்கு மூன்று பொருள்கள் உள்ளன.

ஆக்கம்
வளர்தல்,
தழைத்தல்,விளங்குதல் என்ற பொருளும் உண்டு
அவிதல்,மறைதல், கெடுதல் என்றும் பொருள் உண்டு.

இவ்வாறு இறைவனாகிய சிவபெருமான் ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறான். சிவபெருமானின் மூன்று அடிப்படையான செயல்களையும் உள்ளடக்கிய சொல் நந்துதல் என்பது. ஆகவே நந்துதலைச் செய்பவன் நந்தி என்று காரணப் பெயராகவும் அது உருவாகிவிட்டது.

மாடு என்றால் செல்வம் என்று பொருள். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன் நந்தி தேவருக்குத்தான் முதன்முதலில் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. சிவன் கோயில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி தேவரை 'தர்ம விடை' என்று அழைப்பார்கள். அழிவே இல்லாமல் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பது தர்மம். அந்த தர்மம்தான் ஈசனைத் தாங்கி நிற்கின்றது.

நந்தி தேவனின் மூச்சுக்காற்றைத்தான் ஈசன் சுவாசிக்கிறார். தர்மம்தான் இறையனாரின் சுவாசம். கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும் வீழ்ந்து வணங்குவதும் கூடாது. நந்தி தேவர், ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.

 



Leave a Comment