திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் பக்தர்கள் குவிந்தனர்!
திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (புதன்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கந்தசஷ்டி திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 20–ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்த பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர்– வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபம் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர்– வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி– தெய்வானை அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று சூரசம்ஹாரம்
6–ம் திருநாளான இன்று (புதன்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணி அளவில் யாகசாலையில் தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.
மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி– அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள். இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் (கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடைபெற்று, சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடைபெறும்.
ஏற்பாடுகள்
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். மேலும் சூரசம்ஹாரத்தை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். சில பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்தும் கோவிலுக்கு வந்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 65 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பறக்கும் கேமரா மூலமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடலில் குளிக்கும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு, தடுப்பு மிதவைகள் மிதக்க விடப்பட்டு உள்ளன. மேலும் கடலோர பாதுகாப்பு படையினர், நீச்சல் வீரர்கள் கடலில் ரோந்து படகில் தயார் நிலையில் உள்ளனர்.
Leave a Comment