திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்!


 

 

திருச்செந்தூரில் அமைந்துள்ள, சுப்ரமணிய சுவாமி கோவில், அறுபடை வீடுகளில், இரண்டாம் படை என போற்றப்படும், மிகச் சிறப்புமிக்க கோவிலாகும். சூரசம்ஹாரம் சிவனின் தோன்றல் பாலமுருகனுக்கும், சிவனின், தீவிர பக்தன் சூரபதுமனுக்கும், திருச்செந்துார் கடற்கரையில் நிகழ்ந்ததால், அங்கு, இப்போதும் இந்நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில், ஆண்டுதோறும், வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மிகச் சரியாக, திருச்செந்துாரில் இருந்து, 6 மைல் துாரத்தில், கடற்கரையோரமாக உள்ள, மாம்பாடு என்ற தலத்தில் தான், போர் நடந்தது. தற்போது, அந்த ஸ்தலம், மணப்பாடு என, அழைக்கப்படுகிறது.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... என்கிற கோஷம், விண்ணை முட்டும் அளவிற்கு, பக்தர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகனை மயில் வாகனத்தில் ஏற்றி, சேவல் கொடியை அளிக்கின்றனர். போரில் வெற்றி அடைந்ததும், முருகன், தன் அய்யன் சிவனுக்கு பூஜை செய்ய விரும்பினான். அதற்காக, கடற்கரையில் கட்டப்பட்ட கோவில் தான், திருச்செந்துார் கோவில். இங்கு, மூலஸ்தானத்தின் பின்பகுதியில், முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தை காணலாம். வெற்றி மாநகர் என, பொருள் படும்படி, ஆரம்பத்தில் வடமொழியில் ஜெயந்திபுரம், பின், சயந்தி, செந்தில் என அழைக்கப்பட்டு, இறுதியில், திருச்செந்துார் என்ற தமிழ்ப்பெயரில் நிலைத்து இருக்கிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை நேரில் கண்டாலும், அதன் சிறப்பை படித்தாலும், பெரியவர்கள், ஆன்மிகவாதிகள் சொல்ல காது குளிரக் கேட்டாலும், பகைவனின் பயமின்றி தைரியமாக வாழலாம். அஞ்சும் முகம் தோன்றும் போது, இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள் என்பது நம்பிக்கை. இந்நிகழ்ச்சியின் போது வழங்கப்படும் பிரசாதம், திருநீறு மந்திரமாகும் என்பது, திருமூலர் வாக்கு.

ஆறுமுகக் கடவுள் நம் முருகன்!

ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம் மற்றும் புகழ் என்கிற ஆறு குணங்களை குறிக்கிற, இந்த ஆறுமுகக் கடவுளை தோற்றுவிக்க எழுந்தது, அதோமுகம். அதோமுகம் என்பது, சிவனின் ஆறாவது முகம் என, தன் திருமந்திரத்தில் குறிக்கிறார், திருமூலர். சிவன், ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களை, திருவானைக்காவல் திருத்தலத்தில் காட்டி அருள்கிறார். ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் ஆறாம் முகமான அதோமுகம், சூட்சுமமாக கண்களுக்கு புலப்படாமல், மறைந்து அகமுகமாகவே இருக்கும். ஆனால், சூரபதுமனை வெல்வதற்காக, திருமுருகனைத் தோற்றுவிக்கத் தீப்பொறியைத் தெறிக்க எழுந்த போது, காட்சியானது அதோமுகம். இம்முகம், பூலோக இறுதியில், ஊழியின் முடிவில், மீண்டும் தோன்றும் என்கிறது திருமந்திரம். உக்கிரத்தை வெளிப்படுத்தும் அதோமுகம், சனகாதி முனிவர்களுக்குக் காட்சி அளிக்கும் போது மட்டும், சாந்த சொரூபமாக இருக்கும்.

 

கந்த சஷ்டி திருநாள் :

கந்த சஷ்டி என்றால், திருச்செந்துார். வேல் என்றால், அது ஆணவத்தை அழித்து, நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். இதன் பொருள் விளங்கும்படி தான், பக்தர்கள், வேல் வேல் வெற்றிவேல்... என, முழங்குகின்றனர். ஐப்பசி மாதத்தில் வருகிற தேய்பிறை சஷ்டியே,கந்தர் சஷ்டி நாள். இந்நன்னாளில், என்ன வரம் கேட்டாலும், அந்த வரம் தந்திடுவான் முருகன் என்பது நம்பிக்கை. மற்ற நாட்களில், விரதம் இருக்க இயலாதவர்கள் கூட, ஆறாவது திதி நாளாம், சஷ்டியில் விரதம் இருப்பதன் மூலம், மகாலட்சுமியின் அருளையும் பெறலாம் என்பதும் ஐதீகம்.

அசுரர்களை அழிக்க நினைத்த முருகன், முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என, எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்து, ஆறாம் நாள், எஞ்சியிருந்த அரக்கன் சூரபதுமனை அழித்தார். இப்படி, நம் முருகப்பெருமான், அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே, நாம், கந்த சஷ்டி விழாவாக கொண்டாடி மகிழ்கிறோம். இன்று, முருகனுக்கு பால், பழம், தினைமாவும், தேனும் கலந்து நிவேதிப்பது விசேஷமானது. சஷ்டி விரதமிருந்தால், கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதைத் தான், சட்டியிலிருந்தால் தான் அகப்பையில் வரும் என, பழமொழியாக சொல்கிறோம். ஐஸ்வர்யத்தைத் தரும் ஆறாம் எண்ணிக்கையில், இந்த விரதம் வருவது மிகச்சிறப்பு. ஆறாம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரன். வீடு, திருமணம், வாகனம் என, திருமகளின் அம்சமாக, அனைத்து சவுகரியங்களையும் தரக்கூடியது சுக்கிரனே. எனவே, கந்த சஷ்டி திருநாளில், சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி, நற்கதி பெறுவோம். 16 செல்வங்களையும் பெற்று, இன்பமான வளமான வாழ்வை பெறுவோம்.

கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, சூரபதுமன் வதம் தவிர்த்து, மேலும் இரு காரணங்கள் உண்டு. உலக நன்மைக்காக, முருகன் அவதரித்த நாள் என்பதற்காகவும், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை வேண்டி, யாகம் செய்ய முருகன் தோன்றி, அருள்புரிந்த நாள் என்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது. கணவனும், மனைவியும் இணைந்து இந்த விரதத்தை மேற்கொண்டால், நல்ல பிள்ளைகள் பிறப்பர் என்பது நம்பிக்கை!

 கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை:

அதிகாலை, 4:30 மணியிலிருந்து, 6:00 மணிக்குள் குளித்து முடித்து, பால் பழம் மட்டும் சாப்பிட வேண்டும். ஓம் சரவணபவ, ஓம் சரவண பவாய நம, ஓம் முருகா... ஆகிய மந்திரங்களில், ஒன்றை தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... வேலவனுக்கு அரோகரா... என கோஷமிட்டு, கோவிலில் விளக்கேற்றி, வழிபாடு செய்ய வேண்டும். திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம் மற்றும் சண்முக கவசம் போன்ற பாடல்களில் ஒன்றை, காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்வது நல்லது.

 

 

 விழா முடிவு? :

சூரசம்ஹாரத்தோடு, இன்றைய விழா முடிவடைந்து விடுவதில்லை. தேவர்களுக்கு, முருகன் செய்த மாபெரும் உதவிக்கு கைமாறாக, தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்து வைத்தான் இந்திரன். எனவே, மறுநாள், முருகன் - தெய்வானை திருமண வைபவத்தோடு தான், விழா நிறைவு பெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில் மட்டும், சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. காரணம், அங்கு போருக்குப் பின், அமைதி நிலவுவதாக ஐதீகம். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை, தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்த முருகன், ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின் போது, சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா என, மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். சூரசம்ஹார விழாவின், ஏழாம் நாளன்று, மாலையில், முருகன் சிவப்பு ஆடை அணிந்து, சிவ பெருமானாகவும், எட்டாம் நாள் அதிகாலையில், வெண்ணிற ஆடையில், பிரம்மாவின் அம்சமாகவும், மதிய வேளையில், பச்சை ஆடை சாத்தி, பெருமாள் அம்சமாகவும் காட்சி அளிக்கிறார். உண்மையை பேசி, பிறருக்கு நல்லதை செய்வதால் மட்டுமல்லாமல், தெய்வங்களின் மீதான நம்பிக்கையும் சேர்ந்தால் தான், வாழ்வின் எல்லா நன்மைகளையும், இன்பங்களையும் பெற முடியும்.

 திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் :

திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவில், முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. முருகக் கடவுளின் அறுபடை வீடுகளுள், இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், கந்த சஷ்டி திருவிழா, 20ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும், திருச்செந்துார் வந்திருந்த பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், இன்று நடக்கிறது. மதியம், 2:00 மணிக்கு சஷ்டி மண்டபத்தில், ஜெயந்தி நாதருக்கு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு, சூரசம்ஹாரத்திற்காக, கடற்கரைக்கு சுவாமி எழுந்தருளுகிறார். அங்கு, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.  இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சுரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில்  திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



Leave a Comment