பிரதோஷம் கிளம்பும் முன் படியுங்க!
பிரதோஷ தினத்தன்று மாலை 4.30க்கு எல்லாருமே பிரதோஷ தரிசனத்துக்கு புறப்படுவோம். அதன் மகிமையைத் தெரிந்து கொண்டு கிளம்புவோமா!
அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ்வை முடித்து கயிலாயம் சென்றான். அந்தப்புரத்தில் பார்வதிதேவி சிவனை தியானித்துக் கொண்டிருந்தாள். வெளியே நந்திதேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார். சிவபார்வதியின் தரிசனம் பெற வேண்டுமென விரும்பிய பக்தன், நந்திதேவரையும் மீறி அம்பிகையின் இருப்பிடம் சென்றான். அவளைக் கண்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு வணங்கினான். பக்தனின் குரல் கேட்ட அம்பிகை, தியானம் கலைந்து எழுந்தாள்.
நந்தியின் காவலையும் மீறி, தன் இருப்பிடத்திற்கு பக்தன் வந்ததைக் கண்டவள், "ஏ நந்தீசா! யாரைக் கேட்டு இவனை உள்ளே அனுமதித்தாய்?'' என்று சத்தமிட்டாள். அவளிடம் வந்த நந்தி,""தாயே! தங்கள் பக்தன் என்பதால் தான் அனுமதித்தேன். நீங்கள் பூஜை முடித்த பிறகுதான் அவனை அனுப்பியிருக்க வேண்டும். தவறாக நடந்து விட்டேன், மன்னியுங்கள்,'' என்றார். அங்கு வந்த சிவன், பணியில் தவறிய நந்தியை பூலோகத்தில் மானிடராகப் பிறக்கும்படி செய்து விட்டார்.
இவ்வேளையில் சிலாதர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சப்தரிஷிகள் வந்தனர். அவர்களுக்கு சிலாதரின் மனைவி அன்னம் பரிமாறச் சென்ற போது "குழந்தையில்லாத வீட்டில் துறவிகள் உண்ணக்கூடாது' என்ற விதிப்படி, அங்கு தங்களால் உண்ண இயலாது எனச் சொல்லி சென்று விட்டனர். இதனால் வருந்திய முனிவரும், அவரது மனைவியும் சிவனை உருக்கமாக வேண்டினர். இந்த வேளையில்தான் சிவன், நந்திக்கு சாபம் கொடுத்திருந்தார்.
நந்தீசரை ஒரு பெட்டியில் வைத்து பூலோகத்தில், சிலாதர் தங்கியிருந்த ஆஸ்ரமத்தின் அருகே வைத்தார். சிலாதர் கண்களில் அந்த பெட்டி பட்டது. அதற்குள் காளையின் முகம், மனித உடலுடன் ஒரு குழந்தை இருந்ததைக் கண்டார். தனக்கு குழந்தை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தவர், ""இறைவா! பிள்ளையில்லாத எனக்கு ஒரு நற்குழந்தையை தந்திருக்கக் கூடாதா? காளை முகம் கொண்ட குழந்தையை ஊரார் எப்படி ஏற்பார்கள்?'' என மன்றாடினார். அந்த நேரத்தில்,""சிலாதா! வந்திருப்பவன் யாரோ அல்ல. என் காவலன் நந்தீசன். அவனுக்கு அழகான முகம் தருகிறேன். ஆனால், அவனது ஆயுள் பூலோகத்தில் 12 ஆண்டுகள் மட்டுமே. அவன் ஒரு சாபத்தால் உன்னிடம் வந்துள்ளான். அவனை வளர்க்க வேண்டியது உன் பொறுப்பு,'' என அசரீரி ஒலித்தது.
12 ஆண்டு தன்னோடு வாழ வந்தவன் என்றாலும், தங்களை கயிலாயம் அழைத்துப் போகிற பிள்ளை என்பதால், சிலாதர் மகிழ்ந்தார். தன் மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்தார். அந்தக் குழந்தை சிவலோகப் பிள்ளை என்பதால், அவனைப் பார்த்தவுடனே பலருக்கு நோய் நீங்கியது. சிலர் அவனைக் கடவுளாகவே பாவித்து வணங்கி, தங்களுக்கு முக்திநிலை வேண்டும் என்றனர். அவன் பிரதோஷ வேளையில் (மாலை4.30-6.00) சிவ தியானத்தில் ஈடுபடுவான். அப்போது பக்தர்கள் பலரும் அவனுடன் இணைந்து சிவ தியானம் செய்வர். அவன் கண்மூடி தியானிக்கும் போது, நெற்றியின் நடுவில் சிவதரிசனம் காட்டினான்.
இதனால், தங்களுக்கு பிறப்பற்ற நிலை கிடைத்ததாக மக்கள் எண்ணினர். பல அற்புதங்கள் நிகழ்த்திய நந்தீசர், 12 வயதில் தன் பெற்றோருடன் கயிலாயம் சேர்ந்து, இழந்த பதவியை மீண்டும் பெற்றார். தன் தவறுக்கு வருந்தி, முழங்காலிட்டு இன்றும் சிவபார்வதி முன்னால் பணிவுடன் அமர்ந்துள்ளார். பிரதோஷ நாளான இன்று, நந்தீஸ்வரரின் கதையைப் படித்தோருக்கு பூமியில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம்.
Leave a Comment