ஓய்வெடுக்கும் குமரன்!  


 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலக்கொடுமலூர் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், இங்கு அன்னை பராசக்தியிடம் பல ஆயுதங்களைப் பெற்று அசுரனை வதம் செய்தார் குமார பெருமான்.  அசுரனை சக்தி வாய்ந்த ஆயுதத்தால் அழித்துவிட்டு திரும்பும்போது, அங்கிருந்த முனிவர்கள் முருகனைக் கண்டுவணங்கினர்.

அந்த இடத்திலேயே (மேற்கு திசையில்) முருகன் நின்று அருளாசி வழங்கினார் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் இந்த ஊருக்கு மேலக்கொடுமழூர் என்ற பெயர் ஏற்பட்டது. மேலக்கொடுமழூர் என்றால் ‘வலிமைமிக்க முழு ஆயுதம் தாங்கி மேற்கு திசை நோக்கி நிற்கின்றவனின் ஊர்’ என்று பொருள். மேலக்கொடுமழுர் என்பது காலப் போக்கில் மருவி மேலக்கொடுமலூர் என மாறிவிட்டது எனக் கூறப்படுகிறது. இக்கோயிலை இராமநாதபுரம் சேதுபதி மன்னர் கட்டினார்.  இக்கோயில் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது, கோயில் இறைவனான முருகனும் மேற்கு பார்த்தபடி இருப்பது சிறப்பு. இங்கு குமரக்கடவுள் சுயம்பு மூர்த்தியாக சுமார் ஆறு அடி உயரத்தில் காட்சியளிக்கிறார்.

திருக்கோயில் சூரபத்மனை வதம் செய்துவிட்டுத் திரும்பும் வழியில் முருகப்பெருமான் ஓய்வெடுப்பதற்காக தங்கிய வனப்பகுதி இது. இங்கே, கைக்குத்தல் அரிசியையும் பாசிப்பருப்பையும் ஊறவைத்து, அவற்றுடன் சர்க்கரையைக் கலந்து நைவேத்தியம் செய்கிறார்கள். இங்கு எதையும் வேகவைப்பது இல்லையாம். முருகப்பெருமான் ஓய்வெடுப்பதால் பகலில் பூஜைகள் நடைபெறாது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

 

 

இக்கோவிலிலின் மற்றொரு சிறப்பு   முஸ்லிம் புலவருக்கு சிலை வைத்து சமய மத நல்லிணத்தை மக்கள் இன்றும் பேணிக்காத்து வருகின்றனர். இது இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையே உள்ள சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த சான்றாகவும் விளங்குகிறது.

முஹம்மது மீர் ஜவாது புலவர் அவர்கள் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் எனும் சிற்றூரில் 1745-ம் ஆண்டு பிறந்தவர். இவர், முகையதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, ராஜராஜேஸ்வரி பஞ்சரத்ன மாலை, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள், சித்திரக் கவிகள், மாலை மாற்றுகள், குமரையா பதி கங்களைப் பாடியுள்ளார்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூரில் உள்ள குமரக்கடவுள் என்ற சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு ஜவாது புலவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். இதற்காக புலவரை கவுரவப்படுத்தும் விதமாக, கோயிலின் விமானத்தில் அவரது சிலையை அமைத்துள்ளது சமய நல்லிணக்கத்துக்குச் சான்றாக விளங்குகிறது.

முதன்முறையாக இக்கோயில் கும்பாபிஷேகம்1926-ம் ஆண்டில்  நடைபெற்றது. கடந்த 2004-ம் ஆண்டு கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத் தின்போது, ஜவாது புலவரை கவுரவிக்கும்விதமாக அவர் பாடிய குமரையா பதிகத்தை மதில் சுவரில் கல்வெட்டாகப் பதித்து கோயிலின் விமானத்தின் தெற்குப் பகுதியில் ஜவாது புலவரின் உருவ சிலையை அமைத்துள்ளனர்.

ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரத் திருவிழாவின்போது நேர்த்திக்கடன் செலுத்த முஸ்லிம் பக்தர்களும் இக்கோவியிலுக்கு வருவதுண்டு.



Leave a Comment