திருத்தணி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடக்காது ஏன் தெரியுமா?


 

உலக நன்மைக்காக ஒரு சமயம் முனிவர்கள்  சிலர் ,ஒரு புத்திரன் வேண்டும் என்று யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில்  ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

புராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார்,தேவர்கள்,அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும் ,அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருள  செய்து நோம்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார். இதன் அடிப்படையில் ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது.

கந்த சஷ்டி விழாவின் போது முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடான திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை மாறாக உற்சவர் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்துகின்றனர்.

திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த சுப்ரமணியர் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்கின்றன புராணங்கள். அதனால் தான் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.

மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று போற்றுகிறது கந்த புராணம். திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ... தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ... தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ... நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்.

 

தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து முருகப்பெருமான் சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. தேவர்களது அச்சம் தணிந்த தலம்; அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால் தணிகை எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. விழாவின் முதல் நாளன்று மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் சண்முகர் சன்னதியில் சாமிக்கு வில்வ இலைகளால் லட்சார்ச்சனை, சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சஷ்டி விரதம் தொடங்கினர்.

கந்தசஷ்டியை முன்னிட்டு விழா நடைபெறும் 7 தினங்களும் சண்முக பெருமானுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் வில்வ  இலைகளால் லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெறுகிறார்கள்.

 சஷ்டியில் விரதமிருப்போம்!!!
 சகல சௌபாக்கியம் பெறுவோம்!!!




Leave a Comment