தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா!
தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்து இக்கோவில் உள்ளது. இங்கு ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா நடைப்பெற்றது. இத்திருவிழா ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்து நான்காவது நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தீபாவளி முடிந்து நான்காவது நாள் சனிக்கிழமை அன்று சாணியடிக்கும் திருவிழா நடைபெற்றது.
முன்னதாக ஊரில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்தனர். சனிக்கிழமை காலை 10 மணிக்கு பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. பின்னர் மதியம் அருகே உள்ள குளத்திலிருந்து சுவாமி அழைப்பு நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பீரேஸ்வரர்
ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்ற சுவாமி அழைப்பு நிகழ்ச்சியில் தாரை தப்பட்டைகள் முழங்க கழுதை மேல் ஒருவரை அமரவைத்து புல்லினால் செய்த மீசையை வைத்து அலங்காரம் செய்து சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர். கோயில் கருவறையில் அலங்கரிக்கப்பட்ட பீரேஸ்வரருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுவர் மற்றும் வாலிபர்கள் 100 க்கும் மேற்பட்டோர் அனைவரும் வெற்றுடம்புடன் கோயிலுக்கு பின்புறம் கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டைகளாக செய்து ஒருவருக்கொருவர் அடித்து விளையாடி மகிழ்ந்தனர். சுமார் 2 மணி நேரம் சாணியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைவரும் அருகில் உள்ள குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு சென்று பீரேஸ்வரரை வழிபட்டனர். இந்த பராம்பரிய நிகழ்ச்சியை பெண்கள் ஆர்வத்துடன் ரசித்தனர்.
புல்மீசை வைத்து அலங்காரம் செய்து அழைத்து வரப்படும் காட்சி
இத்திருவிழாவை குறித்து கிராம பெரியவர்கள் கூறியது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்து வந்த பெரியவர் தானியங்களை கொட்டி வைத்துள்ளார், பின்னர் அந்த பெரியவர் இறந்த பிறகு ஊர்மக்கள் தானியம் கொட்டப்பட்டிருந்த இடத்தில் சாணத்தை கொட்டி குப்பை மேடாக்கி பயன்படுத்தி வந்தனர். ஒருநாள் குப்பையை விவசாயநிலத்திற்கு கொண்டு செல்வதற்காக மண்வெட்டியால் வெட்டி எடுத்தபோது குப்பைமேட்டிற்குள் சிவலிங்கம் இருந்தது. இதைக்கண்டு பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் அந்த சிவ லிங்கத்தை கிராம நடுவில் கோவில் அமைத்து பூஜைகள் செய்து மக்கள் வழிபட்டு வந்தனர்.
சிறுவர்கள் சாணியடித்து விளையாடி மகிழ்ந்தனர்
சாணம் இருந்த குப்பை மேட்டிலிருந்து சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதால் தீபாவளி முடிந்து 4 வது நாள் சாணியடி திருவிழா நடத்தி வருவதாகவும், அதனடிப்படையில் ஆண்டு தோறும் இத்திருவிழா நடைபெறுவதாகவும், திருவிழா முடிந்தவுடன் இச்சாணத்தை விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும் என ஐதீகம் என்று தெரிவித்தனர். இவ்விழாவில் தாளவாடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்து மகிழ்ந்தனர். அதுமட்டுமல்லாமல் தமிழகம்,கர்நாடகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநோத விழாவில் கலந்து கொண்டனர்.
Leave a Comment