வாழ்வை நெறிப்படுத்தும் மந்திர ஜெபம்


 

இன்றைய காலகட்டத்தில் , ஆறில் இருந்து அறுபது வயது வரை வயது வித்தியாசம் இன்றி , தவறாமல் புலம்புவது ஸ்ட்ரெஸ்  எனப்படும் மன அழுத்தம் . நம் முன்னோர்கள் வாழ்ந்த எளிமையான  வாழ்வியல் முறைகளில் இருந்து விலகியதால் இன்று இந்த மன அழுத்தத்தில் இருந்து விடு பட , எதை தின்றால் பித்தம் சரியாகும் என்ற அளவிற்கு வந்த விட்டோம்.

 ஆன்மீகத்தை உலகிற்கே எடுத்து சொன்ன நம் நாட்டில் ,அதை  இன்று நம்முடைய   அடுத்த தலைமுறைக்கு முறையாக சொல்லிக் கொடுக்க ஆளில்லை . அதனால் தான் இத்தனை நாள் கண்டுக்கொள்ளாமல் விட்டிருந்த ,நம் நாட்டின் பாரம்பரிய கலைகளான  யோகா மற்றும் தியானக் கலையை , தூசி தட்டி எடுத்து மூலைக்கு மூலை கூவி கூவி வியாபாரம் செய்துக் கொண்டிருக்கிறோம் .

 அமைதி மற்றும் நிம்மதி வெளியே காசு கொடுத்து வாங்கும் விஷயம் இல்லை . அது நமக்குள் தேடி கண்டுபிடிக்க வேண்டிய புதையல் . இருந்த இடத்தில் இருந்தே  இறைவனை காணவும் , மனதை நெறிப்படுத்தவும் நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த  விஷயம் தான்  மந்திர ஜெபம் . ஆனால் உண்மையில் தியானம் என்றால் என்ன ?. மந்திர ஜெபம் என்றால் என்ன ? .  மந்திர ஜெபம் செய்யும் முறை பற்றி இப்பதிவில் காணலாம் .

 

                                                                          

மந்திர ஜெபம் செய்ய நல்ல ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலை வேண்டும் . அதை நல்ல குருமார்களின் அறிவுரையோடு தேர்வு செய்துக்கொள்ளலாம் . இதற்காக  108 மணிகள் கொண்ட மாலையை பயன்படுத்த வேண்டும். இதன் தாத்பரியமாவது ,உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பயன்படும் எனக் கூறப்படுகிறது .

 மந்திர ஜெபம் செய்யும் போது  வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் தான்  மாலையை அழுத்த வேண்டும். நமக்கு வசதியாக இருக்கிறது என்று ஆட்காட்டி விரலில் ஜபம் செய்யக்கூடாது . மந்திர ஜெபம் செய்யும் போது , கிருஷ்ண மணி என்று  அழைக்கப்படும் 109 வது மணியை எப்போதும்  தாண்டக்கூடாது. மேலும் மீண்டும் ஜெபித்த வழியே மாலையை திருப்பி ஜெபிக்க வேண்டும் என்பது நியதி .

 நாம்  அமரும் இடமும் , தேர்ந்து எடுக்கும்  ஆசனமும் கூட மந்திர ஜெபத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . தர்ப்பை ஆசனம் அல்லது கம்பளித்துணியில்  தான்  அமர்ந்து ஜெபம் செய்யவேண்டும். ஜெபம் செய்யும் பொழுது உடலில் நேர்மறை சக்தி  ஏற்படும் என்பதால் , அவை நமது உடலிலேயே தங்க வேண்டும்.  ஆதலால் வெறும் தரையில் அமர்ந்து ஜெபம் செய்யவேக்கூடாது. பத்மாசனம், சுகாசனம் மற்றும் சித்தாசனத்தில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.

 ஜெபிக்கும் பொழுது ஜெபமாலை யார் கண்களுக்கும் வெளியே தெரியாதபடி ஓர் துணியிலோ அல்லது அங்கவஸ்திரம் அணிந்து அதன் உள்பகுதியிலோ வைத்து ஜெபம் செய்யவேண்டும்.

 குருவிடம்  தீட்சை பெற்றவர்கள் , அந்த  மந்திரத்தை சத்தமாகவோ , உதடுகள் அசையயும் படியோ  சொல்லாமல் ,மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். ஆனால் நாமாவளி மந்திரங்கள் மட்டும் பாராயணம் செய்யும் பொழுது உரக்க சொல்லலாம்.

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த மந்திர ஜெபத்தை எல்லா இடங்களில் இருந்தும் சொல்லலாமா ?. சாதாரணமான ஒரு விஷயத்திற்கே இடம் ,பொருள் , ஏவல் இருக்கும் போது , உன்னதமான மந்திரங்களை பாராயணம் ஏற்ற இடத்தையும் நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் . 

 வயோதிகம் காரணமாகவோ , உடல் நிலையின் பொருட்டோ , என்னால் வெளியே செல்ல முடியாது என்பவர்கள்  வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்யலாம் . அதற்கு ஒரு பங்கு பலன் கிடைக்கும் என்றால் ,திருமகள் வாசம் செய்வதாக நம்பப்படும் பசுவின் அருகில் அமர்ந்து ஜெபம்செய்வதால் 100 மடங்கு பலன் கிடைக்கும். இதுவே ஆறு மற்றும் குளக்கரையில் அமர்ந்து ஜெபித்தால் 1000 மடங்கு பலன் கிடைக்கும் . பர்வதத்தின்  மீது அமர்ந்து ஜெபித்தால் 10,000 மடங்கு பலன். கோவிலில் அமர்ந்து ஜெபித்தால் லட்சம் மடங்கு பலன் கிடைக்கும். குருவின் பாத கமலங்களுக்கு அருகில் அமர்ந்து ஜெபித்தால் கோடானகோடி பலன் ஏற்படும் என மந்திர சாஸ்திரம் கூறுகிறது.

 இடத்தை அவரவர் வசதிக்கேற்ப தேர்வு செய்தாயிற்று , அடுத்து மந்திர ஜெபம் செய்வதற்கான  நேரத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வதும் முக்கியம் .  சூரிய உதய மற்றும் அஸ்தமன காலத்தில் ஜெபம் செய்தால் அதிக பலன் உண்டு. கிரகணம், பௌர்ணமி மற்றும் அமாவாசை காலங்களில் ஜெபம் செய்தாலும்  பன்மடங்கு பலன் ஏற்படும்.

 ஞாபக சக்தி, கூர்மையாக சிந்தித்தல், வேகமான செயல் போன்றவை மந்திர  ஜெபத்தால் ஏற்படக்கூடிய பலன்கள் என்பதால் ,  தீராத வியாதியஸ்தர்களின் அருகில் அமர்ந்து ஜெபம் செய்தால் அவர்கள் உடலில்  நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை கண்கூடாகக் காணலாம்.

 இன்னும் எண்ணிலடங்கா  நன்மைகளை கொண்ட இந்த மந்திர ஜெபத்தை முறையாக தெரிந்துக் கொண்டு , பிறர் நன்மைக்காக  ஜெபிக்கும் போது   இந்த பிறவியின் பயனை அடைய முடியும் 

 



Leave a Comment