தீராத நோய்கள் தீர்க்கும் கரிமலை
பெரிய பாதையில் செல்லும் பக்தர்கள் கரியிலம்தோட்டை அடுத்து கரிமலை அடிவாரத்தை அடையலாம். இந்த மலையில் ஏறும்போது தங்கள் பிரம்மச்சரிய விரதத்தின் சக்தியை உணரலாம். இதை விட கடினமான மலை உலகில் இல்லையோ என்று எண்ணுமளவுக்கு பெரும் ஏற்றத்தில் பக்தர்கள் ஏறுகிறார்கள். இம்மலையிலுள்ள மண் கருப்பாக இருக்கும். எனவே இம்மலைக்கு "கருமலை' என்ற பெயர் இருந்து "கரிமலை' என்று மாறிவிட்டது. கரி என்றால் தமிழில் யானை என்று அர்த்தம். காட்டுயானைகள் நிறைந்த கடினமான மலைப்பகுதி என்றும் கூறுவர். மலை உச்சியில் கரிமலைநாதர் என்ற மூர்த்தியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இங்கு சுவையான தண்ணீருடன் கூடிய சுனை உள்ளது. இதை ஐயப்பன் தனது அம்பினால் உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நீரை பக்தர்கள் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். கரிமலையில் மிகவும் கவனமாக நடக்க வேண்டும். ஏனெனில், ஒரு ஒற்றையடிப் பாதையே நம் கண்முன் தென்படும். ஒரு பக்கம் அதலபாதாளம், மறுபக்கம் உரசும் பாறைகள் என இருப்பதால் மிக கவனமாக ஏற வேண்டும். ஏற்றம் இருக்கும் அளவுக்கு இறக்கமும் பக்தர்களைச் சிரமப்படுத்தும். கால்கள் பின்னி தடுமாறும். ஆனாலும், ஐயப்பன் கருணையுடன் இந்த இடத்தைக் கடக்க அருள்செய்வார். மனதிற்குள் சரணம் சொல்லியபடியே பக்தர்கள் மலையேறுவார்கள். இம்மலையில் மூலிகைச் செடிகள் அதிகம் இருக்கிறது என்பதால், இதைக் கடந்தவுடனேயே தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்கிறார்கள்.
Leave a Comment