அழுதா நதியின் கதை...


காடு, மலை ஏறி, இறங்கி மேலும் சுமார் 6 மைல் நடந்து, அழகிய வனத்தில் காளைகட்டி என்ற இடத்தை சென்றடையலாம். மகிஷியை கொன்ற தன் மகன் மணிகண்டனை வாழ்த்துவதற்காக வந்த சிவன், தனது வாகனமான காளையைக் கட்டிய இடம் என்று கருதப்படுவதால், இப்பெயர் ஏற்பட்டது.
இங்கே சிவாலயம் ஒன்று இருக்கிறது. காளைகட்டியிலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை மைல் நடந்து அழுதாநதிக் கரையை சென்றடையலாம். மணிகண்டனால் தூக்கி எறியப் பட்ட மகிஷியின் உடல் இந்த நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இயற்கை அழகும், நெடிய மரங்களும் அவைகளை அணைத்து நிற்கும் பசுங்கொடிகளும், பள்ளத்தாக்கில் ஓடிவரும் அழுதாநதியும் பார்க்க பரவசமடையச் செய்யும்.
அழுதாநதி:
மணிகண்டன் அம்பு மகிஷிமேல் பட்டதும் அவளோட தீய குணம் மாறி நல்ல எண்ணம் வந்தது. அதனால் தன்னை மன்னிக்கும்படி வேண்டி மனம் விட்டு அழுதாள். அந்தக் கண்ணீர்தான் அழுதா நதியாகப் பெருகி ஓடுகிறதாம்.
அழுதையாற்று நீரில் நீராடி, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அங்கிருந்து சுமார் 2 மைல் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறினால் இஞ்சிப்பாறைக்கோட்டை என்னுமிடத்தை அடையலாம். பின்னர், கல்லிடும் குன்று என்ற இடம் வருகிறது.
மகிஷியை வதம் செய்த ஐயப்பன், அவளது உடலை இங்கு புதைத்துவிட்டு, கனமான கற்களை வை த்துச் சென்றாராம். இதன் அடிப்படையில் அழுதா நதியில் எடுத்து வந்த கற்களை பக்தர்கள் இவ்விடத்தில் போட்டுச் செல்கிறார்கள். இந்த இடத்தில் கல்லைப் போடும் பக்தர்கள், தங்கள் பாவம் நிவர்த்தியாக வேண்டும் என்று வேண்டிக்கொள்வர். மகிஷி பாவத்தின் சின்னம். புதைந்து கிடக்கும் பாவச்சின்னம் மீண்டும் எழுந்து விடக்கூடாது என்பதால், கல்லைப் போட்டு எழவிடாமல் செய்கின்றனர்.
காவலர் ஐயப்பன் :
அழுதாமலை உச்சியில், "இஞ்சிப்பாறைக்கோட்டை' இருக்கிறது. இங்குள்ள கோயிலில் "தேவன் வியாக்ரபாதன்' என்ற பெயரில் ஐயப்பசுவாமி அருளுகிறார். "வியாக்ரம்' என்றால் "புலி'. ஐயப்பன் புலிகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன்னைக் காணச்செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் காவலராக விளங்குகிறார். ஆன்மிக ரீதியாக, இதை வேறு மாதிரியாக பொருள் காணலாம். மனிதன், இந்த உலக இன்பத்தை பெரிதென நினைக்கிறான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய இன்பங்களை அடைய ஆசை கொண்டு, பாதகங்களைச் செய்யக் கூட தயாராகி விடுகிறான். இந்த பாதகங்களே மனதை ஆட்டிப்படைக்கும் புலிகளுக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த கொடிய புலிகளை கட்டிப்போட்டு விட்டால் மனதில் நல்ல சிந்தனைகள் மட்டுமே தங்கும். பக்தி மார்க்கத்திற்குள் மனிதன் வருவான். இந்த ஐயப்பனை வணங்கி விட்டு நடந்தால், முக்குழி என்ற இடம் வரும். இங்கு மாரியம்மன் அருள் செய்கிறாள். அம்பிகையை வணங்கி விட்டு தொடர்ந்து நடந்தால் கரியிலம்தோட்டை அடையலாம். இவ்விடத்தில் மலைப்பாதை சமதளமாக இருக்கும். இங்கு பக்தர்கள் தங்கிச் செல்ல வசதியுள்ளது. அங்கு உணவருந்தி சிறிது ஓய்வெடுத்துப் பின் புதுச்சேரி என்ற ஆற்றை கடக்க வேண்டும்.



Leave a Comment