ஐயப்ப பக்தர்கள் கவனிக்க....


சபரிமலை பம்பை ஆற்றில் பக்தர்கள் சோப்பு, எண்ணெய் பயன்படுத்தி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு ஒன்றரை முதல் 6 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டலகால பூஜை தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ளது. மண்டலகால பூஜைக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக திருவிதாங்கோடு தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மண்டல சீசனை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள். இவர்கள் புனித நீரான பம்பையில் குளித்த பின்னரே சாமிதரிசனம் செய்ய சன்னிதானம் செல்வார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தி குளிப்பதாலும், உடை, கவர்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை வீசுவதாலும் பம்பை அசுத்தம் ஆவதாக ஏராளமான புகார்கள் உள்ளன. இதையடுத்து பம்பை நதியை மீட்க பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. ஏற்கனவே பம்பை ஆற்றை அசுத்தப்படுத்தக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பம்பை ஆற்றில் பக்தர்கள் சோப்பு, எண்ணெய், ஷாம்பு பயன்படுத்தி குளிக்க பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் கிரிஜா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.



Leave a Comment