லட்சுமி குபேரன் கோயிலில் தீபாவளிக்கு சிறப்பு பூஜை....
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே ரத்தினமங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ளது 500 ஆண்டுகள்ள பழமையான லட்சுமி குபேரன் கோயில். தீபாவளி தினத்தன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. தீபாவளி தினத்தன்று குபேரனை வழிபடுவது சிறந்த பலன்களை அளிக்கும் என்பதால், அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தினமும் கோயில் நடை காலை 5.30 மணிக்கே திறக்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் இறைவனை தரிசிக்கும் வகையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும். லட்சுமி குபேரன் கோயிலில், சிரித்த முகத்துடன், அன்னை லட்சுமி, துணைவியார் சித்தரிணியுடன் காட்சி அளிக்கிறார் குபேரன். அந்த சன்னதியை அடுத்து லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவ கிரகங்களுக்கு என தனித்தனி பிரகாரங்களும் உள்ளன. இங்கு மிக அழகாக ஒரு கோசாலையும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான் என்பது நம்பிக்கை. அதேப்போல கோமாதா பூஜையை குபேர பூஜையாகக் கருத வேண்டும் என்கிறது சாஸ்திரம். எனவே, இந்த கோயிலில் இருக்கும் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு பழங்கள் அளிப்பது குபேரனுக்கு செய்யும் பூஜையாகவே கருதப்படுகிறது.
Leave a Comment