செல்வம் கொழிக்கும் குபேர பூஜை
இருள் அகற்றி நமது வாழ்வில் ஒளியேற்றும் தீபாவளி திரு நாளில் குபேர பூஜை செய்தால், பல வழிகளிலும் செல்வம் நம் வாசல் வந்து சேரும்.அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்றால் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பொருள் நம் வாழ்வின் பல விசயங்களை முடிவு செய்கிறது. ஒருவர் வீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி, குபேர பூஜை செய்வது அவசியம். தீபாவளி குபேர பூஜை செய்ய உகந்த நாள் . வீட்டில் தீபாவளியன்று குபேர பூஜை செய்ய செல்வ செழிப்பு தழைத்தோங்கி வளரும்.
மகாலட்சுமி சுத்தமாகவும், நறுமணம் நிறைந்திருக்கும் வீட்டில் விரும்பி கொலுவிருப்பாள். முதியோர்களுக்கும் மரியாதையும், குழந்தைகளுக்கு தேவையான அன்பும் எங்கு இருக்கிறதோ அந்த வீட்டில் லட்சுமி அருள்மழை பொழிவாள் என்கிறது புராணம்.
லட்சுமி குபேர பூஜையை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து செய்யலாம். பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தினம் இரவே செய்வது நல்லது.
தீபாவளி திருநாள் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் கிழக்கு அல்லது மேற்கு திசையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் புஷ்பலங்காரம் செய்யவேண்டும்.
லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழை இலை விரித்து, நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.
அடுத்து மஞ்சளில் பிடித்த பிள்ளையாரை வாழையிலையின் வலது பக்கமாக வைத்து குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
விநாயகர் வழிபாட்டுடன் மகாலட்சுமி துதி பாடல்களை பாடி வணங்கலாம். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாவிட்டால் குபேராய நமஹ... தனபதியே நமஹ.. என்று துதித்தாலே போதும்.உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் இவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கதீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும்.
இப்படி பூஜை செய்த பின்னர் தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டும். தீபாவளி திருநாளில் லட்சுமி குபேர பூஜை செய்தால் , சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கி கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடுவர் என்பது ஐதீகம்.
தீபாவளி அன்று புதன் ஹோரையில் லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதை தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.
இப்படிச் செய்யும் போது , நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி... என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.
தீபாவளி அன்று செய்யும் ள ட்சுமி குபேர பூஜையும், நாணய பூஜையும் ஆண்டு முழுவதும் நம் செல்வ நிலையை மேம்படுத்தி தரும்.
Leave a Comment