வடநாட்டில் தீப ஒளி திருநாள்
தீபாவளியை பொறுத்தவரை தென்னிந்தியாவில் பாரம்பரியப்படி,அதிகாலை கங்கா ஸ்நானம், லக்ஷ்மி பூஜை, புத்தாடை, பட்டாசு, பட்சணங்கள் என குதூகல கொண்டாட்டமாக இருக்கும். ஆனால், வட நாட்டிலோ, தீபாவளி என்பது,ராமரும், சீதையும் 14 ஆண்டுகள் வன வாசத்திற்குப் பிறகு நாடு திரும்பும் நாள். ஆதலால் , ராமர் ,சீதாதேவியை வரவேற்க வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். மேலும் அவர்களுக்கு தீபாவளி என்பது ஐந்து நாள் கொண்டாட்டம். இந்த ஐந்து நாட்களிலும் தவறாமல் விரதமும் இருப்பார்கள்.
குஜராத்தில் தீபாவளியை லட்சுமி பூஜையாக கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுக்கும் லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான் அங்கு தீபாவளி. மேலும் குஜராத்தில் இது புது வருடமாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டை சுத்தப்படுத்தி, பல அழகான வர்ணங்கள் பூசி, லட்சுமியை வரவேற்கத் தயாராகி விடுகிறார்கள். செய்து மாவிலை தோரணங்கள் கட்டி கணபதியும் இலட்சுமியும் சேர்ந்து அமர செய்து பூஜை செய்யப்படுகிறது. அன்று தான் வியாபாரிகள் தங்கள் புதுக் கணக்கை எழுத ஆரம்பிக்கின்றனர்,
இதுவே மஹாராஷ்ட்டிரத்தில், தீபாவளி ‘பலிபாத்யாமா’ என்று சொல்கிறார்கள். மகாபலி சக்ரவர்த்தி வாமனரால் அழுத்தப்பட்டு பாதாள லோகத்திற்கு சென்று நிகழ்வை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளியின் போது, வண்ணங்களால் ஆன ‘ரங்கோலி’ என்ற கோலங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலையும் அலங்கரிக்கின்றது. தீபாவளி அன்று தங்கள் வீட்டு வாசல், பால்கனியில் கலர் பேப்பரில் முக்கோணம் அல்லது சதுரம், ஷட்கோணம் போன்று கூண்டுகள் தயார் செய்து அதனுள் விளக்குகள் பொருத்தி ,நரகாசுரன் வதத்தையும் கொண்டாடுகின்றனர்.
ராஜஸ்தானிலும் உத்தர்பிரதேசத்திலும் தீபவளியன்று ,கோவர்தன பூஜை செய்கிறார்கள். கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்ததைக் குறிக்கும் வகையில், ‘அன்னகுட்’என்று சாதம் வெடித்து அதை ஒரு பெரிய மலைப்போல் பிடித்து கிருஷ்ணர் தூக்குவதைப் போல் செய்கிறார்கள். கிருஷ்ணர் இந்திரனை ஜெயித்ததையும் கொண்டாடுகிறார்கள்.
காளி பூஜையை பிரதானமாக செய்யும் பெங்காலிகள் ,சகோதர சகோதரிகளின் நலனுக்குப் பிரார்த்தனை செய்யும் ‘பாய் போலே’ என்ற பூஜையை செய்கிறார்கள்.
சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்தசிங் மிகப் புகழ் அடைந்து வரும் போது முகல் அரசர் ஜஹாங்கீருக்கு இது பிடிக்காமல் அவரை அவரது கைது செய்து குவாலியர் கோட்டையில் ,அவருடன் அவரைச் சார்ந்த 21 சீக்கியர்களையும் உள்ளே அடைத்தார். பின் ஜஹாங்கீரே அவர்களைத் தீபாவளியன்று சிறையிலிருந்து விடுவித்தார், ஆகையால் பஞ்சாப்பில் இந்நாளை ‘பந்தி சோர்ரா’என்று கொண்டாடுகின்றனர் சீக்கியர்கள்.
ஜைனமத குரு மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாளாக தீபாவளியன்று தீபங்கள் ஏற்றி ‘உத்தராத்த்யாயன் சூத்ரா’வைப் படிக்கின்றனர் ஜைனர்கள்.
மொத்தத்தில் எந்தப் பெயர் சொல்லி கொண்டாடினாலும் தீபாவளி என்றாலே நம் மனம் சந்தோஷம் மற்றும் குதூகலத்தால் நிறைந்து ததும்பும் என்பதில் சந்தேகமில்லை.
Leave a Comment