தீபாவளி மகிழ்ச்சியா? செலவா?
தீபாவளி என்றாலே இனம் புரியாத நிலை, அறியாத சந்தோசம் வந்து என்ன செய்வதென்றே தெரியாமல் எதையோ தேடி ஓடிக் கொண்டே இருக்க செய்யும் ஒரு வித கிளர்ச்சியின் வெடித்தல் தான். எதையாவது செய்து விட மாட்டோமா என்று எதையெதையோ செய்து விட்டு தூங்கி விடும் ஒரு வகை புது கலாச்சாரத்தை இன்றைய நவீன குடும்பம் பின் பற்றுகிறது.
இப்படிப்பட்ட தீபாவளி மகிழ்ச்சியா.... செலவா.....என்பதை பார்க்கலாம்.
பண்டிகை என்பது மனிதன் தன்னை புத்துணர்வு படுத்த எடுத்துக் கொள்ளும் இளைப்பாறல். அது தேவையான கொண்டாட்டம். இந்த சமூகம் கொண்டாட்டத்தின் வழியே உறவை வளர்த்த சமூகம். குடும்பமாய்.... உறவுகளாய்... பக்கத்துக்கு வீட்டோடு.... எதிர் வீட்டோடு... சேர்ந்து உணவுகளை பரிமாறிக்கொண்டு நாம் பண்டிகைகளை கொண்டாடினோம்.. .தீபாவளியில் பட்டாசுகளை வெடிக்கவிட்டோம்.
ஓடி ஓடி உழைத்த மனதின் அமைதி.... சிரிக்க......சிந்திக்க... புரிந்து கொள்ள... புரிய வைக்க.... ஒரு தவம் கலைந்த கொண்டாட்டம்... உற்சாக நதியின் மொத்தங்களின் பக்கங்கள் அனைத்தும் கவிதையாய் கிறுக்கி விட்டு சிரிக்கும் பிள்ளையின் மனதுக்குள் திரும்பும் நமக்கான பாதை தீபாளியாகவே இருக்கிறது. மதமற்ற சாதியற்ற பண்டியாகையாகவே நாம் பார்க்கிறோம். ஆசையின் ரூபம் சேர்ந்து கொண்டே வந்து ஒரு நாளில் அவனை அவனுக்காக வாழ வைத்து வைக்க அன்றொரு நாள் போதுமானதாய் இருக்கிறது. இருக்கும் பணத்தையெல்லாம் துணி எடுக்கவும்... தின்பண்டம் வாங்கவும் செலவழிக்கிறோம்.
மகிழ்ச்சி செலவு என்று இரண்டு திசைகளைப் பற்றியும் போகிற போக்கில் ஒரு சேரதான் பார்க்க வேண்டி இருக்கிறது.. அது அப்படித்தான். அது தொடர் நீட்சி. அது எல்லாக் கால வாழ்வியலின் சூட்சுமம் கூட....
தீபாவளி மகிழ்ச்சிதான், இருப்பினும் ஒவ்வொரு தீபாவளிக்கும் உள்ளுக்குள் வந்து அமர்ந்து கொள்ளும் நரகாசுரனை அத்தனை சீக்கிரம் கட்டவிழ்த்து விடாமல் ஓடி ஓடி விரட்டி சுட்டு அடித்து நொறுக்கும் சாகசங்களை என்னுள்ளே சுமந்து கொண்டிருக்கிறோம். இன்னும் அவை வெவ்வேறு காட்சிகளாய் தன்னை மாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. அதுதான் வாழ்வின் பலம். இன்னும் வேகமாய் இந்த வாழ்வின் ஆசையை நோக்கி ஓடுவதற்கான தவம். நாம் தீபாவளியில் நடந்ததை நினைத்து நினைத்தே இன்றைய தீபாவளியை கொண்டாடுகிறோம்.
காசு எல்லாரிடமும் எல்லாமுமாக இருப்பதில்லை. அது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேறுபடுகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபடுகிறது. அதன் பொருட்டே தீபாவளி ஆனாலும் அதன் மீது கட்டமைக்கப் படுவதில்லை தீபாவளி. நண்பர் ஒருவர் கூறினார். காசு நிறைய இருந்தும்.... குடும்பம் நிறைந்து இருந்தும்.....ஏனோ தீபாவளி மனதில் ஒட்டவில்லை என்றார். இதை என்னவென்று சொல்வது. காசுகளாலும் காட்சிகளாலும்....ஆடைகளாலும்.. இனிப்புகளாலும். அதையெல்லாம் தாண்டி ஒரு வித தேடல் இருக்கிறது. ஒரு வித உயிர்ப்பு இருக்கிறது. மன நிறைவையும் மகிழ்ச்சியையுமே தந்திருக்கிறது...
குழந்தையோடு கொஞ்சும் மனநிலையை, குடும்பத்தோடு இருக்கும் பாதுகாப்பை தீபாவளி தரத்தானே செய்கிறது. குடும்பம் என்றால் செலவுகள் இருக்கத்தான் செய்யும். கஷ்டங்கள் மட்டுமா வாழ்வு. இஷ்டங்களும் தானே. வீட்டுக்கு தகுந்த வாசல்படி தானே அழகு. நமக்கு என்ன முடியுமோ அது தான் கொண்டாட்டம். அதிகம் ஆசைப் படுதலே துன்பம். புத்தர் சொன்னதை இன்னமும் தவறாக புரிந்து கொள்பவர்களுக்கு ஆங்காங்கே நின்று தீபாவளி அத்து மீறத்தான் செய்யும். பாட்டி தாத்தா பெரியம்மா பெரியப்பா.. சித்தி சித்தப்பா... அண்ணன் தம்பி தங்கை என்று அங்கங்கே பொருளாதார ரீதியாக பிரிந்து கிடக்கும் சொந்த பந்தங்கள்... மாப்ள மட்சான் நண்பன் தோழி என்ற வீதிக்காரர்கள் என்று ஆளுக்கொரு பட்டாசும்.. ஆளுக்கொரு இனிப்பும் சந்தோசம் தானே.
வாரம் முழுக்க வேலை.. மாதம் முழுக்க வேலை.. வருடம் முழுக்க வேலை. பொருளாதாரத்தின் பின் ஓடி ஓடி களைத்த உடலுக்கும் மனதுக்கும் ஆறுதல் ஆக தீபாவளி மயில் இறாகய் வருடி விட்டு போகும். தீபாவளி என்பது வெறும் செலவை மட்டும் தரும். இஷ்டத்தோடு கொண்டாடியது ஒரு காலம். கஷ்டம் வந்தாலும் கொண்டாடுவது ஓர் அனுபவம். இங்கே இனி ஒவ்வொரு தீபாவளியும் நம் வாழ்வின் பக்கத்தின் அனுபவமாகவே இருக்கட்டும். அது கூட்டு வாழ்வின் முன்னுதாரணமாக இருக்கும். சந்தோசத்தை வெளியில் தேடுவது பொருளாதாரம் மானுடம் . அதை உள்ளிருந்து அள்ளி தருவது மானுடம் பூரணத்துவம் மகிழ்ச்சியில் தான். கொண்டாடிக் கிடக்கவே இந்த பிறவி ஆக.. இந்த தீபாவளி மகிழ்ச்சி தான்.
மகிழ்ச்சி எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் செலவும். இங்கு எதுவும் சும்மா கிடைப்பதில்லை. கேட்ட துணி எடுத்து தரவில்லை என்றால் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் மனைவியை வைத்துக் கொண்டு எங்கிருந்து மகிழ்ச்சியை கொள்வது. 2000 ரூபாய்க்கு வெடி வேண்டும் என்று மகன் கேட்கையில்.... காசில்லாத அப்பன் எங்கிருந்து மகிழ்ச்சி கொள்ள!
தீபாவளி செலவு தான். தீபாவளி வருகிறது என்றாலே அந்த மாதம் முதல் தேதியில் இருந்தே கணக்கு போடும் ஆட்களை நாம் அறிவோம். தீபாவளி மனம் சமபந்தப் பட்டது என்ற காலத்தைக் கடந்து விட்டோம். இது காசுக்கு வாழும் காலம். இங்கே.. தீபாவளியை வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கும் கூட்டம் நாம்மை சுற்றி இருக்கிறது. இனிப்புகளாலும் துணிகளாலும்.....வெடிகளாலும் நாம் ஏமாறவே ஒவ்வொரு தீபாவளியும் வந்து கொண்டிருக்கிறது. காசை கரியாக்கி கரியை புகையாக்கி.....சந்தோஷம் என்ற பெயரால் சுற்றுசூழலைக் கெடுத்து வானத்தை அடைத்து வீதியை நிரப்பி..... குப்பைகளாலும் சத்தங்களாலும் ஊர் முழுக்க இருக்கும் சிற்றுயிர்களை அடித்து விரட்டி விட்டு சந்தோஷம் கொள்ளும் நாம் யாரை கொல்ல இத்தனையும் செய்கிறோம்....?
"நரகாசுரன் இறந்தானா... உண்மையில் இருந்தானா"? என்றொரு கேள்வி , ஆனால் இம்முறையும் சாகத் கிடப்பது நம் பொருளாதாரம். அந்த செலவு இந்த செலவு என்று ஒரு நாள் கூத்துக்கு மீசையை மட்டும் அல்ல. முகத்தையே எடுத்து விட்டு பின் முண்டமாய் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வட்டி கட்டிக் கொண்டு அலைவது எந்த விதத்தில் நியாயம். ஊருக்கு பெருமை காட்டி உள்ளுக்குள் புகைந்து வாழ்வைதை தான் இந்த தீபாவளியும் காட்டியது. செலவு தான் தீபாவளி. அதுவும் அதீத செலவு. ஒரு கிலோ கோழியில் இருந்து.... ஒரு கிலோ இனிப்பு வரை.. தொட்டதெல்லாம் கை மீறிய செலவு.
மகிழ்வு என்பது முகத்தில் இருந்தது என்பதை விட அகத்தில் இருந்ததா என்றொரு கேள்வி வருகிறது. சிவகாசி பிழைக்கிறது தான். சிலபோது ஏற்படும் விபத்தில் மொத்தமாய் சாகிறதே. அதுவும் படிக்க வேண்டிய எழுத வேண்டிய பிஞ்சுக் கைகள் பட்டாசு வேலையில் ஈடுபடுவதை நாம் எல்லாரும் உணர்ந்தே இருக்கிறோம். பின் எப்படி வெடித்து அதை கொண்டாட்டம் என்று நம்ப முடிகிறது. ஆக, கொண்டாட்டங்கள்... செலவில் இல்லை. பகட்டில் இல்லை. அது குடும்பத்தில் இருக்கிறது. சரியான திட்டமிடுதலுடன் தீபாவளியை எதிர் நோக்கியவர்களுக்கு அது அழகான அற்புதமான கொண்டாட்டம் தான். அதிகாலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் வைத்து... ஆற அமர குளித்து...அளவாக வீட்டில் செய்த இனிப்பு உண்டு... நம்மை பிடித்திருக்கும் நரகாசுரனை விரட்டி அடித்து விட்டு இன்னும் பலமாய் வேகமாய் இந்த உலகின் ஓட்டத்தை எதிர் நோக்க நாம் கொண்டாடி இருந்தால் அது தான் மகிழ்வு.. அவரவர் வசதிக்கு ஏற்ப புத்தாடை இருந்தால் அது தான் நிறைவு. என் வருமானம் இது. இதற்குள் என் தீபாவளி அழகு என்று உணர்ந்த குடும்பத்துக்கு தீபாவளி கொண்டாட்டம் தான். அது செலவின் பதிவேட்டில் வராது. அது அழகியலின் சந்தோசத்தில் நிரம்பும். காக்கா குருவியை, வீதி நாய்களை அடித்து விரட்டும் பாட்டாசுகள் இல்லாமல் காற்றை மாசாக்கும் தூசுகள் நிறைந்து வழியாமல்... தேவைக்கு ஜோதியாய் நிரம்பி மலரும் சிறு சிறு வெடிகளுடன் கொண்டாடினால் இந்த தீபாவளி மகிழ்ச்சியாக அமையும்.
Leave a Comment