பாரம்பரியமாக கொண்டாடும் தல தீபாவளியின் சிறப்பு அம்சங்கள்!


தீபாவளி என்றாலே நமது மனதில் மத்தாப்பு வெடிப்பதை போன்ற மகிழ்ச்சி உண்டாகும். தீபாவளி எப்படா வரும், ஒரு மாசத்துக்கு முன்னாலேயே வாங்கி வச்ச புத்தாடையை எப்படா போடலாம்னு எல்லாரும் எங்கிட்டு இருப்பாங்க.. இவங்க எல்லாருடைய ஏக்கமும் ஒரு பக்கம் இருந்தால், தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்க தானே செய்யும். தீபாவளி என்பது வருடா வருடம் வரக் கூடியது. ஆனால் தலை தீபாவளி என்பதோ வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே வரக்கூடியதாகும். இந்த தலை தீபாவளி நமது தமிழகத்தில் மிக மிக விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

திருமணமாகி முதல் ஆண்டில் வரும் தீபாவளியே தலை தீபாவளியாக தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது! திருமணத்திற்குப் பின்னர் வரும் அனைத்து பண்டிகைகளும் மணமகனின் வீட்டில் கொண்டாடப்பட்டாலும் இந்த தலை தீபாவளி மட்டும் மணமகள் வீட்டில் கொண்டாடப்படுவது மற்றுமொரு சிறப்பு.

புதிதாக மணமுடித்த மணமக்களை தீபாவளிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே பெண்ணின் பெற்றோர் அவர்களது வீட்டிற்குச் சென்று சீர் வரிசை (வெற்றிலை, பூ, பழங்கள், இனிப்புகள், ஆடைகள் ) வைத்து தலை தீபாவளி கொண்டாட வீட்டிற்கு வருமாறு அழைப்பர். அதன்படி மணமக்களும் தீபாவளிக்கு முன் தினமே பெண்ணின் வீட்டிற்குச் செல்வர்.

 

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம்..

பூஜைகள் செய்து, பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் இனிப்புகள் உண்டு மகிழ்வர். அவர்கள் ஜோடியாக பெண்ணின் குடும்பத்தாருடன் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்வர். மணமக‌ன் த‌ன் மனை‌வி‌யி‌ன் குடு‌ம்ப‌த்தாருட‌ன் ‌தீபாவ‌ளியை கொ‌ண்டாடுவதுதா‌ன் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தலை தீபாவளி.

பெண் எடுத்த வீட்டில் மணமகனும் ஒரு அங்கத்தினர் தான் என்பதை கூறும் வகையிலும், பெண்ணை தங்கள் வீட்டிற்கு அனுப்பிய சம்பந்தி வீட்டிற்கு தீபாவளி அன்று தனது மகனை உங்களது மகனாக ஏற்றுக் கொள்ளும்படியாக அனுப்பி வைத்து பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் உறவு பாராட்டிக் கொள்வதும் இந்த தலை தீபாவளியின் வழக்கமாகும்.

தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். 

 

 
தீபாவளி அமாவாசை அன்று வருவதால் தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.

இரண்யாட்ச‍‌‍‌ன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வெனறார்.அப்போ து பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.

பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.

 



நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.
இறுதி நேரத்தில்தான் நரகாசுரனுக்கு அவனுடைய பிறப்பு ரகசியம் உணர்த்தப்பட்டது. அதாவது, ஒரு காலத்தில் கடலுக்குள் பூமி மறைக்கப்பட்டிருந்தபோது மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து, கடலுக்குள் புகுந்து பூமியை வெளிக்கொண்டு வந்தார். அச்சமயம் அவருக்கும் பூமாதேவிக்குமான சங்கமத்தில்தான் நரகாசுரன் பிறப்பெடுத்தான்! மகாவிஷ்ணுவின் அவதாரமே கிருஷ்ண பகவான், பூமாதேவியின் அம்சம்தான் சத்யபாமா, இந்த உண்மைகளைத் தன்னுடைய உயிர் பிரியும் தருவாயில் தான் நரகாசுரன் தெரிந்துகொண்டான். 


நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப் படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.

 

 

நரகாசுரன் கொல்லப்பட்ட அந்நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடி வருகின்றோம்.அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது. இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள்.

 



Leave a Comment