தீபாவளி பலகாரங்களை பாரம்பரியத்துடன் செய்வது எப்படி?


1.முள்ளு முறுக்கு

என்னென்ன தேவை?

பச்சரிசி - 3 கப், 
கடலைப் பருப்பு - 1 கப், 
பயத்தம் பருப்பு - 1/4 கப், 
எள் தேய்த்து காய்ந்தது - 1/2 டீஸ்பூன், 
சீரகம் - 1/2 டீஸ்பூன், 
கட்டி பெருங்காயம் - சிறிதளவு, 
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், 
உப்பு - தேவைக்கு, 
எண்ணெய் - பொரிப்பதற்கு. 



எப்படிச் செய்வது?  

சுத்தம் செய்து கழுவி காய வைத்த அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு, பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு வெண்ணெய், எள், சீரகம், தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். முள் முறுக்கு அச்சில் தேவையான மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். 
வி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து செய்யவும்.

 



2. மைசூர்பாக்கு

என்னென்ன தேவை?

கடலை மாவு - 1 கப், 
சர்க்கரை - 2 கப், 
நெய் - 3 கப், 
தண்ணீர் - 1 கப். 

எப்படிச் செய்வது?  

கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பதத்துக்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும். அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விட வேண்டும். அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாக்காக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும். 

 



3.அதிரசம்

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 2 கப், 
வெல்லம் - 2 கப், 
தண்ணீர் - 1 கப், 
எண்ணெய் - தேவைக்கு, 
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன். 

எப்படிச் செய்வது?  

வெல்லத்தைப் பொடித்து, தண்ணீரில் கரைத்து, கல், மண் போக வடிகட்டி, ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி பாகு காய்ச்சவும். முற்றின கம்பிப் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். உடனே அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக பாகில் கொட்டி கை விடாமல் கிளறவும். ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறிய மாவை சுத்தமான வெள்ளைத் துணி போட்டு வாயை மூடி கட்டி தட்டாமல் வைக்கவும். மறுநாள் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை  இலையில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும். தட்டியவற்றை எண்ணெயில் போட்டு நன்கு சிவந்தவுடன் எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.     

(பச்சை அரிசியை ஊற வைத்து வடித்து, நிழலில் உலர்த்தி, மெஷினில் அரைத்து அதிரசம் செய்தால் மிருதுவாக இருக்கும். அதிரசத்துக்குப் பாகுதான் முக்கியம். ஒரு தட்டில் தண்ணீர் விட்டு 1/4 டீஸ்பூன் பாகை விட்டால் கரையாமல் இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம்.

 



4.முந்திரிகத்லி 

என்னென்ன தேவை?

முந்திரிப் பருப்பு - 1 கப், 
சர்க்கரைத் தூள் - 1 கப், 
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள், 
சில்வர் பேப்பர் - அலங்கரிக்க, 
நெய் - 2 டீஸ்பூன். 

எப்படிச் செய்வது?  

முந்திரிப் பருப்பை 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். ஓர் அடிகனமான கடாயில் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்துக் கை விடாமல் கிளறவும். சுருண்டு வரும்போது எசென்ஸ் சேர்க்கவும். உடனே இறக்கி மீண்டும் கிளறவும். 1 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். சில்வர் பேப்பரால் அலங்கரிக்கவும்.

இன்னொரு செய்முறை

முந்திரிப் பருப்பை உலர வைத்து மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். அத்துடன் தண்ணீர், சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பாகுப் பதத்துக்கு காய்ச்சவும். அதில் முந்திரிப் பொடியை கொட்டி, கிளறி இறக்கவும். எசென்ஸ் சேர்த்து சூடாக இறக்கியப் பின் கிளறி, தட்டில் நெய் தடவி ஊற்றி ஆறியதும் துண்டுகள் போடலாம். சுலபமாக செய்யலாம் இந்த கத்லி.

 



5.ரவாலட்டு

என்னென்ன தேவை?

பாம்பே ரவை - 1/2 கிலோ, 
சர்க்கரை - 1/2 கிலோ, 
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன், 
முந்திரி, திராட்சை - தலா 50 கிராம், 
நெய் - 1/4 கிலோ அல்லது தேவைக்கு.

எப்படிச் செய்வது?  

ரவையை வெறும் கடாயில் நிறம் மாறாமல் வறுக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வறுத்து உடைத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூளுடன் கலக்கவும். இப்போது வறுத்த ரவை, பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள், உடைத்த முந்திரி, திராட்சை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். நெய்யைக் காய்ச்சி அதில் சிறிது, சிறிதாக ஊற்றி உருண்டை உருட்டும் பதத்துக்கு வந்ததும் நெய் ஊற்றுவதை நிறுத்தி விடவும். சூடாக இருக்கும் போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.   

(ரவையை பொடித்தும் ரவா லாடு செய்யலாம். இத்துடன் சிலர் 1/2 கப் வறுத்துப் பொடித்த பாசிப் பருப்பு தூள் சேர்த்தும் செய்கிறார்கள். சிலர் வறுத்த தேங்காய் சேர்த்தும் செய்வார்கள். ஆனால், உருண்டை பிடிக்க நெய் சூடாக இருக்க வேண்டும். 

 


6.சோமாஸ் 

என்னென்ன தேவை?

மேல் மாவுக்கு... 

மைதா - 250 கிராம், 
ரவை - 1/2 கப், 
நெய் - 1 டீஸ்பூன்.

பூரணம் செய்ய... 

கசகசா - 1 டேபிள்ஸ்பூன், பொடித்த பொட்டுக் கடலை - 1/2 கப், பொடித்த சர்க்கரை - 1 கப், வறுத்து நறுக்கிய முந்திரி - தேவைக்கு, கொப்பரை தேங்காய் - 1 மூடி (துருவிக் கொள்ளவும்), ஏலக்காய் - தேவைக்கு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.  

எப்படிச் செய்வது
 
மேல் மாவுக்குக் கொடுத்ததை சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து ஈரத் துணி போட்டு மூடி வைக்கவும். கசகசாவை வறுத்து பொடிக்கவும். அத்துடன் பூரணத்துக்குக் கொடுத்த அனைத்தையும் சேர்த்து பூரணம் தயாரித்துக் கொள்ளவும். பிசைந்து வைத்த மைதா மாவை பூரிகளாக இட்டு, சோமாஸ் அச்சில் வைத்து சோமாஸ் வடிவம் கொடுக்கவும். இதனுடன் தேவையான பூரணத்தை வைத்து மூடி எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.     

(அச்சு இல்லாமலும் செய்யலாம். அல்லது பூரியின் மத்தியில் வைத்து மடித்து, சோமாஸ் கட்டரால் ஓரங்களை வெட்டியும் செய்யலாம். இதுதான் பாரம்பரிய சோமாஸ்.

 



7.தேங்காய்பர்பி

என்னென்ன தேவை?

தேங்காய்த் துருவல் - 2 கப், 
சர்க்கரை - 2 கப், 
நெய் - 1 டீஸ்பூன், 
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன், 
பால் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?  

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி, அதில் 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அதில் பால் விட்டு பொங்கி வரும்போது கசடை எடுக்கவும். பின் சர்க்கரை சேர்ந்து கொதித்து கம்பிப் பதம் வந்தவுடன் தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறவும். கொஞ்சம் கெட்டியானதும் நெய், ஏலக்காய் தூள் போட்டு சுருள வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் விருப்பமான வடிவில் துண்டுகள் போடவும்.   

(தேங்காயை அடி வரை துருவாமல் மேலோட்டமாகத் துருவிச் செய்ய வேண்டும். இப்படி செய்தால் பர்பி வெள்ளையாக இருக்கும். கலர் சேர்த்தும் கலர் பர்பி செய்யலாம்.

 

 



8.கோதுமைஅல்வா 

என்னென்ன தேவை?

சம்பா கோதுமை - 1/4 கிலோ, 
சர்க்கரை - 1/2 கிலோ, 
நெய் - 1/4 கிலோ, 
முந்திரி - 25, 
ஏலக்காய் தூள் - சிறிதளவு, 
ஆரஞ்சு கலர் பவுடர் - சிறிது.

எப்படிச் செய்வது?  

சம்பா கோதுமையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து மசிய அரைத்து ஒரு மெல்லிய சுத்தமான துணியில் வடிகட்டி, பால் எடுக்கவும். அந்தப் பாலை 8 மணி நேரம் பாத்திரத்தில் அப்படியே வைத்தி ருக்கவும். அடியில் கெட்டியாக தங்கி, நீர் மேலே தெளிந்து நிற்கும். அந்த நீரை எடுத்து விடவும். கோதுமைப் பாலில் சர்க்கரை சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கரண்டியில் ஒட்டும் போது கலர் பவுடர் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் வறுத்து உடைத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். ருசியான கோதுமை அல்வா ரெடி.   

 

9.அச்சுமுறுக்கு

என்னென்ன தேவை?

மைதா - 1 கப், 
சர்க்கரை - 1/2 கப், 
தேங்காய்ப் பால் - 1 கப், 
எசென்ஸ் - 1 டீஸ்பூன் அல்லது ஏலக்காய் - 1/2 டீஸ்பூன், 
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை, 
எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?  

மைதா மாவுடன் எண்ணெயை தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு நீர்க்க மாவாகக் கரைக்கவும். எண்ணெயை காய வைத்து, அதில் அச்சு முறுக்கு கரண்டிகளை வைத்துச் சூடாக்கவும். இந்த சூடான கரண்டிகளை மாவில் முக்கால் பாகம் மூழ்கும் அளவுக்கு நனைக்கவும். ஒட்டிக் கொண்ட மாவுடன் திரும்பவும் கரண்டியை எண்ணெயில் விடவும். ஒட்டிய பாகம் வெந்து வெளியில் வந்து விடும். திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.   

(மாவில் எசென்ஸ் சேர்த்ததும் புது மணத்தோடு இருக்கும். சுட்டெடுக்க தீ மிதமாக இருக்க வேண்டும். நன்கு சலித்த பச்சரிசி மாவு 2 கப், சர்க்கரை 
1 1/2 கப், உளுந்து மாவு 1/2 கப், ஏலக்காய் தூள் சேர்த்தும் செய்யலாம். பல முறை சலித்து, கரைத்து அல்லது அரிசியை வெண்ணெயைப் போல் அரைத்து கலந்து செய்ய வேண்டும்.

 

 

10.பூந்தி

தேவையானவை:  கடலை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றேகால் கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பைனாப்பிள் ஜூஸ் - கால் கப், பைனாப்பிள் எசன்ஸ் - சில துளிகள், எண்ணெய் - பொரிக்க.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர், சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி, ஆறியதும் அதில் பைனாப்பிள் ஜூஸ், எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். கடலைமாவு மற்றும் சமையல் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண் ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியை எண்ணெயின் மேலே தூக்கி பிடித்து மாவை ஊற்றி வேறு ஒரு கரண்டியால் தேய்த்துவிடவும். பூந்தி முக்கால் பதம் வெந்ததும் எடுத்து, தயார் செய்துள்ள பாகில் சேர்த்து நன்கு கலந்துவிடவும். ஊறியதும் பரிமாறவும்.

 



Leave a Comment