நரகாசுரனை கொன்றது மட்டுமா தீபாவளி?
தீபம் என்றால் ஒளி, விளக்கு என்றால் ஆவளி வரிசை, வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கும் பண்டிகையே தீபாவளி ஆகும்.தீபத்தில் பரமத்துமாவும்,நெருப்பில் ஜீவாத்துமாவும் வாசம் செய்து அருள் தருவதாக ஐதிகம்.. ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை,தலைக்கணம் போன்ற இருட்டுகளை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்திட வேண்டும். தீபாவளி ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாப்படும் ஒரு இந்து பண்டிகை ஆகும்.
தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு வகைகள், சினிமா, லேட்டஸ்டாக இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் படம் என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது.
தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே. , கிருஷ்ணரின் மனைவியர் (திருமகள், பூமகள்) இருவருள் ஒருவரான பூமகளுக்கும் (பூமாதேவிக்கு) மஹாவிஷ்ணுவராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பிறந்த மகன் தான் நரகாசுரன்.
ஆரம்பத்தில் அவன் மிக நல்லவனாக தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான். நாளடைவில் நரகாசுரன் கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். இதற்கு இடையில் அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்யதான். பிரம்மாவும் மனம் மகிழ்ந்து காட்சித் தந்து, "அன்பனே உன் தவத்திற்கு மெச்சினேன், விரும்பிய வரம் கேள்" என்றார்.
"நான் சாகக்கூடாது, எனக்குச் சாகா வரம் அருளுங்கள்" என்றான். அதற்கு "உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள்: அழியத்தான் வேண்டும் அது தர இயலாது என பிரமா கூறி, வேறு எதாவது கேள்" என்றார். அதனால் அவன் "ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு எவராலும் மரணம் அடையக்கூடாது" என்று வரமருளக் கேட்டான்.
வரத்தை வாங்கியதும் நரகாசுரனுக்கு கர்வம் (அசுரக் குணம்) தலைக்கேறியது. ஆரம்பித்து விட்டது நரகாசுரனின் அட்டகாசம். அதனால் அவன், அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களையும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். எவரும் இரவில் வீட்டில் விளக்கேற்றக் கூடாது என்றும் உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்ச விளக்குகளை வீட்டில் வைத்திருந்தவர்களின் தலைகளைக் கொய்தான்.
இந்திர லோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான். இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான், நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர். "கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்" என்றார் கிருஷ்ணர்.
ஸ்ரீகிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார். அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான், நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை. போர் ஆரம்பித்தது. அவனை பூமாதேவியினால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரம் பெற்றிருந்தமையால், பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார் கிருஷ்ணர்.
கண்ணனுக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள். அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. முதலில் நரகாசுரனின் படைத் தளபதி முரன் என்பவனைக் கொன்றார் கிருஷ்ணர். அதனால்தான் கிருஷ்ணனுக்கு "முராரி" என்ற பெயர் வந்தது. கடும்போர் தொடர்ந்தது. நரகாசுரன் தன் ”கதையை” வீசினான், மாயக் கண்ணன் மயங்கி விழுந்ததுபோல் விழுந்தான். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா?
எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர், ஆனால் காரணம் இல்லாமல் காரியமா? பூமாதேவியின் அம்சமான சத்திய பாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள் அல்லவா? அவள் கையால் தானே மரணம் ஆக வேண்டும்? அந்த சந்தற்பத்தை ஏற்படுத்தவே கிருஷ்ணர் மயங்கியதை அறியாத சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு எழுந்தாள்,"என் கண்ணனுக்கா இந்த நிலை" என்று அவள் மனம் கொதிக்க, அம்பு நரகாசுரன் மேல் சரமாரியாக எய்ய அவனும் (நரகாசுரன்) கீழே சாய்ந்தான். அவன் கேட்ட வரத்தின்படி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான்.
நரகாசுரன் கொல்லப்பட்ட அந்நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடி வருகின்றோம். உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெறுகிறார் கிருஷ்ணன். ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார்.
அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது.
தீபாவளியை இப்படியும் சொல்லாம்!
நரகாசுரன் கொல்லப்பட்ட அத் தினத்தையே தீபாவளிப்பண்டிகையாகக் கொண்டாடுவதாகப் புராணங்கள் விளக்குகின்றன. அதனால், இத்தினத்தை, நரக சதுர்த்தி என்றும் அழைப்பார்கள்.
கிருபானந்த வாரியார், " பார்வதி தேவியர் கேதார கெளரி விரதம் இருந்து, சிவபெருமானின் இடப்பக்கத்தில் இடம்பெற்ற திருநாளே தீப விழாவாகக் கொண்டாடப்படுகிறது " என்றுரைக்கிறார்.
தீபாவளித் திருநாளில், திருக்கயிலாயத்தில், சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாட்டு ஆடியதாக ஒரு புராணக் குறிப்பு உண்டு. இதை நினைவூட்டும் விதத்தில் குஜராத்தில் தீபாவளி தினத்தில் இந்து மக்கள் சொக்கட்டான் விளையாட்டு ஆடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கானக வாழ்வு முடிந்து அரக்கன் இராவணனை அழித்து, சீதையை மீட்ட இராமபிரான், வெற்றித் திருமகனாக அயோத்தி திரும்பிய திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்கள் தோறும் தீபங்களை ஏற்றிவைத்து மகிழ்ச்சிப் பெருவிழாவாகக் கொண்டாடினார்களாம். அதுவே தீபத் திருநாளாக மாறியது என்று உரைக்கும் சான்றோரும் உண்டு.
இப்படி பலவிதமான காரணங்கள் கொண்டு தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டாலும், அத்திருநாள் நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றே ஒன்றுதான். " தீமைகள் என்னும் இருள் அகன்று, உலகம் முழுவதும் பக்திப் பேரொளியைப் பெற வேண்டும் " என்பதே அது. எனவே, தீபாவளித் திருநாளில், பெரியவர்கள் வகுத்துத் தந்த வழியில், முறையாக இறைவனைப் பூஜித்து அவனது அருள் பெற வேண்டும்.
Leave a Comment