தீபாவளி பண்டிகை எதற்காக!
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். ஒளித்திருநாள் என்று கூறுவதும் பொருந்தும். மக்களிடையே மிகவும் பிரபலமான பண்டிகை தீபாவளிதான். மதம், மொழி, கலாச்சாரம் இவற்றினால், ஏனைய பண்டிகைகளுக்கு மக்கள் காட்டும் ஆர்வத்தில் வித்தியாசமிருக்கலாம்.
ஆனால் எல்லா இனத்தவாராலும் ஒரே மாதிரி வரவேற்பை பெறும் ஒரு பண்டிகை தீபாவளி. தீபாவளியின் பொது வீடுகளிலும்,கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி ,தீப அலங்காரங்களில் அகல் விளக்குகள் அங்கங்கே ஒளி வீசிச் சிரித்துக்கொண்டிருக்கும்.
இதேபோல், 'திவாளி' பண்டிகை வட மாநிலங்களில் லக்ஷ்மி பூஜையாகக் கருதப்படுகின்றது. வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அந்த ஆண்டின் புதுக்கணக்கை 'திவாளி' பண்டிகையின்போதுதான் ஆரம்பிப்பது வழக்கம்.
நரகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்று மக்களுக்கு விடுதலையும், மகிழ்ச்சியும் அளித்தார், மகாவிஷ்ணுவாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான். அவனைத் தான் கொல்லாமல், தன் மனைவி சத்தியபாமாவின் கைகளால் அவன் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே, போர்க்களத்தில் மயங்கித் தேரில் சரிந்து வீழ்ந்து மாயம் புரிகிறார், கண்ணன் (கிருஷ்ணன்).
தன் தாயைத்தவிரத் தனக்கு வேறு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றான், நரகாசுரன். எந்தத் தாயாவது தன் மகனைக் கொல்லுவாளா? ஆனால், சத்தியபாமாவுக்கோ, நரகாசுரன் தன் மகன் என்று தெரியாது. தெரியாதபடி மாயம் செய்து மயங்கியவர் கிருஷ்ணன்.
ஆகவே, கணவனைக் காக்க, தேரோட்டியாகப் போர்க்களத்துக்குச் சென்றிருந்த சத்தியபாமா, தன் வில்லை எடுத்து வளைத்தாள். அடங்காத கோபத்துடன், நரகாசுரனைக் கொன்று வீழ்த்தினாள். உயிர் பிரியும்போது ஞானம் பெற்ற அந்த அரக்கன், ஒரு வரம் கேட்டான். " என் மரண தினத்தை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்.என் கொடிய செயல்களால் இருண்டு கிடந்த இல்லங்களில் ஒளி விளங்க வேண்டும். மக்கள் நீராடி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு மகிழ்ச்சியாக இப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்." என்று கேட்டுக்கொண்டான்.
நரகாசுரன் கொல்லப்பட்ட அத்தினத்தையே தீபாவளிப்பண்டிகையாகக் கொண்டாடுவதாகப் புராணங்கள் விளக்குகின்றன. அதனால், இத்தினத்தை, நரக சதுர்த்தி என்றும் அழைப்பார்கள்.
Leave a Comment