இயற்கையை நேசிப்பவர்களுக்கு தலகோனா சிவன்...


தலகோனா, மலைகளின் தலைவன், திருப்பதி ஏழுமலைகளில் முதல் மலை, திருப்பதியில் இருந்து சுமார் ஐம்பது கிலோ மீட்டர் உள்ளது இந்த தலகோனா மலை. திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. சந்தன மரங்கள் மற்றும் அறிய காட்டு விலங்குகள் இருக்கும் இடம். தலகோனா நீர்வீழ்ச்சி விழும் நீர் எண்ணற்ற மூலிகைகளின் கலவையாகும், காட்டு வழிப்பாதைகள் நிறைந்த இந்த இடம் பக்தியுடன் கோயிலுக்கு செல்பவர்களுக்கு மட்டுமல்ல ட்ரெக்கிங் செல்பவர்களுக்கும் ஏற்றது. திருப்பதியில் இருந்து காரில் சென்றால் எளிதாக சென்றடைய முடியும். இங்கு "அதர்மம்", "காதல் கொண்டேன்" மற்றும் சில திரைப்படங்களின் படங்களும் எடுக்கப்பட்டதாம். தலகோனா நுழையும் முன் செக்போஸ்டில் உங்கள் வாகனங்களை அலசி ஆராய்ந்த பின்னர் தான் உள்ள அனுமதிக்கிறார்கள். காரில் எத்தனை வாட்டர் பாட்டில் இருக்கிறது என்று கேட்டு பாட்டிலுக்கு பத்து ருபாய் வாங்கிக்கொண்டு, திரும்பி வரும்போது காலி பாட்டிலைக் காட்டி காசைத் திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றனர், பிளாஸ்டிக் குப்பைகளை கையாள இந்த யுக்தி. செக்போஸ்டிற்கு பிறகு சாலை சுமாராகத்தான் இருக்கும். குரங்குகள் தொல்லையை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. அருவியிலிருந்து வரும் நீரை ஒரு குட்டை போல் தேக்கி வைத்திருந்தனர். மலை ஏற முடியாதவர்கள் இங்கேயே குளித்து விட்டு செல்லலாம். டிரெக்கிங் போல் இல்லாமல் அனைவரும் சிரமமின்றி ஏற சிமென்ட் கற்களாலும் கைப்பிடிகளாலும் வழி அமைத்திருந்தனர். அரைமணி நேர நடை பயணத்திற்க்கு பின்பு அருவி கொட்டும் ஓசை கேட்கும். சுமார் 80 மீட்டர் உயரத்திலிருந்து தண்ணீர் அருவியாக வீழ்ந்துக்கொண்டிருக்கும். வனத்துறை சார்பில் தடுப்புக்கம்பிகள் இருந்ததால் தைரியமாக அருவின் கீழ் செல்லலாம். மேலே இருந்து ஐஸ் கட்டிகளை எறிவது போல் இருக்கும இந்த நீர் வீழ்ச்சி. வருடம் 365 நாட்களும் தண்ணீர் வந்துகொண்டிருகும் என்றார்கள். சீசனில் தண்ணீரின் வீழ்ச்சி பிரம்மாண்டமாய் இருக்குமாம். இன்னும் சற்று மேலே சென்றால் அருவியின் இன்னோரு பகுதியை காணலாம் என்றார்கள். அங்கு செல்ல படிகள் கூட அதிகம் இல்லை. ஆனால் அப்படி ஒன்றும் கடினமாகவும் இல்லை. மிக அற்புதமான ஒரு சூழல் அங்கு. வெகு உயர்ந்த செங்குத்தான மலை முகட்டிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கிறது - வேறெந்த பாறையையும் தொடாமல்! தண்ணீர் விழுந்து தெறிக்கும் தரையும் தெரியவில்லை! அருவியில் நின்றால் தண்ணீர் முழுவதும் நேராக நம்மீதுதான் விழுகிறது - மொத்த விசையுடன். ஒவ்வொரு துளியும் தனித்தனி ஊசியாய் உடலில் இறங்குவது போல, வேறெங்கும் உணர முடியாத இன்ப வேதனை அது!



Leave a Comment