பளிச் என பிரகாசிக்கும் திருப்பதி ஏழுமலையான்


திருப்பதி ஏழுமலையானை தொலைவில் இருந்து பளிச் என்று தரிசிக்க புதிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறையில் கூடுதல் நெய் விளக்குகளை ஏற்றி, பக்தர்கள் தெளிவாக பார்த்து தரிசிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் 70 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய உற்சவ நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு தரிசிக்கும் பக்தர்கள், ஜெயபேரி விஜயபேரி சிலை அருகில் இருந்து சுமார் 70 மீட்டர் தொலைவில் நின்றபடி ஏழுமலையானை தரிசிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு தரிசிக்கும்போது சுவாமியின் உருவம் தெளிவாக தெரியாமல் பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர். மேலும் கோயிலின் ஆகம விதிப்படி கருவறையில் மின்விளக்குகள் பொருத்தக்கூடாது என்பதால் நெய் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் போதிய வெளிச்சம் இல்லாததால் சுவாமியை தரிசிக்க முடியவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பக்தர்களின் புகார்கள் குறித்து அதிகாரிகளுடன் தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து கோயில் கருவறையில் கூடுதல் நெய்விளக்குகள் வைத்து வெளிச்சத்தை ஏற்படுத்தி பக்தர்கள் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். அதன்படி 2 ஏகாங்கிகள் நியமித்து கூடுதலாக 2 நெய்விளக்குகள் வைக்கப்பட்டு அதிகளவு நெய் ஊற்றி அந்த விளக்குகளில் உள்ள திரிகளை அதிகாலை 2.30 மணி, பகல் 11 மணி, மாலை 6.30 மணி என 3 வேளைகளில் மாற்றி பிரகாசமாக எரிய விடப்பட்டுள்ளது. கூடுதல் விளக்குகள் வெளிச்சத்தில் கருவறையில் உள்ள ஏழுமலையானை பக்தர்கள் தெளிவாக கண்டு தரிசனம் செய்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Leave a Comment