திருமலை பக்தர்களுக்கு பேட்டரி பேருந்துகள்


காற்று மாசை தடுக்கும் வகையில் திருப்பதி-திருமலை இடையே பேட்டரி பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் வாகனங்களால் காற்றில் மாசு ஏற்படுவதைத் தடுக்க, முதற்கட்டமாக 1,500 பேட்டரி பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கோல்ட் ஸ்டோன் எலக்ட்ரிக் பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரூ.3 கோடி செலவில் ஒரு பஸ்ஸை வாங்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக 2 பஸ்கள் தயாராகி உள்ளது. இதில் ஒரு பஸ் திருப்பதியில் நேற்று காலையில் அறிமுகம் செய்யப்பட்டது. திருப்பதி பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த பஸ் திருமலைக்கு சென்றது. புகை, சத்தம் இல்லாத, காற்றில் மாசு கலக்காத இந்த பஸ்ஸில் 32 பேர் செல்லலாம். கண்காணிப்பு கேமரா, சீட் பெல்ட், டிவி, ஆகிய வசதிகள் இதில் உள்ளன. இதில் உள்ள சென்ஸார் மூலம் விபத்து ஏற்படுவதை முன் கூட்டியே அறிந்து அதைத் தவிர்க்க முடியும். இதில் சாதாரண பஸ்களைப் போல ‘கியர்’கள் இல்லை. ஒரு முறை சார்ஜ் செய்தால், 275 முதல் 300 கி.மீ வரை இதை இயக்கலாம். இதேபோல மேலும் 40 பஸ்கள் வரும் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து திருப்பதி-திருமலை இடையே இயக்கப்படும் என தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.



Leave a Comment