திருமலையில் 13ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்


யுகாதி பண்டிகையை யொட்டி, வரும் 13ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பதால் அன்று 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் ஆகிய விசேஷங்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வரும் 18ம் தேதி யுகாதி பண்டிகையான தெலுங்கு வருட பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்காக 13ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு கருவறையில் உள்ள மூலவருக்கு பட்டு வஸ்திரத்தால் மூடப்பட்டு, கருவறை முதல் கோயில் அனைத்து சன்னதிகளும், மண்டபங்களும் சுத்தம் செய்து பச்சை கற்பூரம், சிலிகட்டை, மஞ்சள், குங்குமம் மற்றும் திரவியம் கலந்து மூலிகை கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்பட உள்ளது.இதையொட்டி அன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும். இப்பணிகள் முடிந்ததும் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



Leave a Comment