ஒரே சந்நிதியில் பெருமாள், லட்சுமி, சிவன்


பொய் சொன்னால் மனிதனுக்கு என்னாகும் என்பதை உணர்த்தும் வகையில் திருமால் ஒரு லீலையை நிகழ்த்த விரும்பினார். ஒருசமயம், கைலாயத்தில் ஒருமுறை சிவனும், பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார். விளையாட்டுக்கு நடுவராக இருந்து வெற்றி பெற்றது யார் என்று சொல்லும் பொறுப்பை ஏற்றார். விளøயாட்டில் பார்வதி வென்றாள். ஆனால், போட்டியில் சிவன் வென்றதாகக் கூறிவிட்டார். தன் சகோதரரே இப்படி சொல்லிவிட்டாரே என வருத்தமடைந்தாள் பார்வதி. கடவுளாகவே இருந்தாலும் பொய் பேசினால், அவர் அதற்குரிய தண்டனையை அடைந்து தீர வேண்டும் என்பதன் அடிப்படையில், தவறான தீர்ப்பு வழங்கிய திருமால், பிளவுபட்ட நாக்குடன் பாம்பாக மாறும்படி சபித்தாள். சாபவிமோசனமாக,பூலோகத்தில் முக்தி தலமாக விளங்கும் காஞ்சிபுரம் சென்று சிவனைப் பூஜித்தால் சாபம் நீங்கும். பிளவுபட்ட நாக்கு ஒன்றாகி பாம்பு வடிவம் மறையும், என்றாள். அதன்படி, திருமாலும் காஞ்சிபுரத்தில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். அவரே, அனந்தபத்மநாபர் என்னும் திருநாமத்துடன் சயனகோலத்தில் லட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கிறார். சிவன் லிங்கவடிவில் மகாகாளேஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். மூவரும் ஒரே சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு. விநாயகரும், முருகனும் சந்நிதியின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். காஞ்சிபுரத்திலுள்ள நவக்கிரக தலங்களில் இது கேதுவுக்குரியதாக திகழ்கிறது. பூமியில் புதையுண்டு கிடந்த இக்கோயிலைப் பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப்பெரியவர் புதுப்பித்து திருப்பணி செய்தார். பலமுறை அவர் வழிபட்டதோடு, பக்தர் களுக்கு ஆசியும் அளித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் செயல்படுகிறது. இது பாம்பு தொடர்புடைய கோயில் என்பதால், தோல், வாய்,நாக்கு, தொடர்பான நோயுள்ளவர்கள், அடிக்கடி தொண்டையில் வலி வந்து பேச சிரமப்படுகிறவர்கள் நோய் நீங்க அனந்த பத்மநாபரை வேண்டலாம்.



Leave a Comment