கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமான பலகாரங்கள்....


கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், பல விதமான பலகாரங்களை நமது வீட்டில் செய்து வழிப்படுவது வழக்கம். அவ்வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமாக செய்யப்படும் சில பலகாரங்களை எளிமையாக செய்து சுவைத்து மகிழுங்கள். 

ரவா லட்டு....

கிருஷ்ணருக்கு பிடித்தது மட்டுமல்ல, நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற பலகாரங்களில் ரவா லட்டு முக்கியமானது. செலவும் குறைவாகவும், மிகவும் எளிய முறையிலும் வீட்டில் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்...

ரவை - ஒரு கப்

நெய் – 4 டீ ஸ்பூன்

சர்க்கரை - அரை கப்

தேங்காய் துருவல் - அரை கப்

ஏலக்காய் பொடி செய்தது - கால் ஸ்பூன்

நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி - 10

சூடான பசும்பால் - அரை கப்

செய்முறை...

அகலமான வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் கொட்டவும். ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதில் பசும்பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும். பின்னர் நமக்கு தேவையான அளவில் உருண்டை பிடித்து வைக்கலாம். சாப்பிட சுவையாக இருக்கும். செய்வதற்கும் எளிதான இனிப்பு இது.

அக்கார அடிசல்....


நெய், வெல்லம் சேர்த்து செய்த அக்கார அடிசல் எனப்படும் இனிப்பு வகை பண்டிகை நாட்களில் பிரசித்தம். நெய் சொட்டச் சொட்ட செய்யப்படும் இந்த இனிப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

தேவையான பொருட்கள்...

பாசுமதி அரிசி - 1 கப்

பாசிப்பருப்பு - ½ கப்

பால் - 750 மிலி

வெல்லம் - 2 கப் முந்திரி,

திராட்சை - கால் கப்

ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன்

நெய் - 50 கிராம்

பச்சைக் கற்பூரம் - சிறிதளவு 

செய்முறை...

வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டவும். பின்னர் சுத்தமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். அரிசி, பருப்பை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியையும், பருப்பையும் போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும். நன்கு வெந்தபின் வெல்லப்பாகை ஊற்றி அதனுடன் கொஞ்சம் நெய்யை விட்டு அடி பிடிக்காமல் கிளறவும். லேசாக கெட்டியான பின் அதில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறவும். கடைசியில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கவும். அக்கார அடிசல் சுவையும், வாசனையும் சூப்பராக இருக்கும். சூடாக சாப்பிடலாம்.

வெல்லம் பால் கொழுக்கட்டை

வெல்லம், பால் சேர்த்து செய்த கொழுக்கட்டை சுவையோடு சத்தானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்...

இட்லி அரிசி - 1 கப்

எண்ணெய் - 3 டீ ஸ்பூன்

காய்ச்சிய பால் - 1 கப்

வெல்லம் - 1 கப்

ஏலக்காய் பொடி - 1/2 டீ ஸ்பூன்

சுக்குப் பொடி - 1/2 டீ ஸ்பூன்

அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - ஒரு கப் வெல்லப்பாகு

செய்முறை...

 

 வெல்லத்தை தட்டி பொடியாக்கவும். பொடியாக்கிய வெல்லத்தை ஒரு கப் எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்த பின் வடிகட்டியால் வெல்லக் கரைசலை வடிகட்டவும். பாலைக் காய்ச்சி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை செய்முறை இட்லி அரிசி ஒரு கப் எடுத்து மூன்று மணி நேரத்திற்கு ஊற விடவும். ஊறிய அரிசியை நன்றாக இரண்டு, மூன்று முறை கழுவிக் கொள்ளவும். அரிசியை சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு நைஸான மாவாக அரைக்கவும். கொழுக்கட்டை செய்வதற்கான மாவு, இட்லிக்கான மாவைக் காட்டிலும் சற்று கெட்டியான மாவாக இருக்க வேண்டும். எனவே அதற்கு ஏற்றவாறு மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்ந்துவிடாமல், குறைந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுச் சூடாக்கி, அரைத்த மாவை அதில் சேர்த்து மிதமான தணலில் வைத்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். எண்ணெய் மாவின் எல்லாப் பகுதிலும் சீராகப் பரவும் படி, கரண்டி கொண்டு நன்றாகக் கலக்கி விட்டு வதக்கவும். வதக்கிய மாவை ஆறவிட்டு ஒரே அளவிலான வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடி சேர்க்கவும். அடுப்பின் தணலைக் குறைத்து, கொதிக்கும் தண்ணீரில் உருட்டி வைத்த மாவு உருண்டைகளைச் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும். கொழுக்கட்டைகள் நன்றாக வெந்து வரும் நிலையில் அதனுடன் காய்ச்சிய பாலையும், வெல்லக் கரைசலையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன் எடுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டுக் குழைத்து மாவுக் கரைசல் தயாரிக்கவும். இந்த மாவுக் கரைசலை கடைசியாக கொழுக்கட்டைப் பாலில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இது கொழுக்கட்டையின் பாலை திக்காக்க உதவுவதுடன், நல்ல சுவையையும் தரும். விருப்பமானால் சிறிது தேங்காய்த் துருவலை பால் கொழுக்கட்டையின் மீது தூவி பின் அடுப்பிலிருந்து இறக்கவும்.

பால் கோவா ....


பாலை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்யப்படும் பால் கோவா

தேவையான பொருட்கள்...

மில்க் மெய்டு - 500 கி

பால் - 150 மி.லி

தயிர் - 125 கி

நெய் - 100 கி

செய்முறை...

 முதலில் மில்க் மெய்டையும், தயிரையும் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு கட்டி கட்டியாக இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பின் அதோடு பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அதனை ஒரு மரக்கரண்டியால் தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த கலவையானது முதலில் தண்ணீர் போன்று தான் இருக்கும். அதனைக் கிண்ட கிண்ட சிறிது நேரம் கழித்து கெட்டியாகி விடும். அப்போது நெய்யில் பாதியை அத்துடன் ஊற்றி கிளரவும். அதை கிளர கிளர சிறிது நேரம் கழித்து பால் கோவா பதத்திற்கு வரும் முன் மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிண்டவும். இப்படி கிளரும் போது பால் கோவா ஆனது நெய்யிலிருந்து பிரியும் நிலைக்கு வந்ததும், அதனை இறக்கி விடவும்.



Leave a Comment