தகதகவென மின்னும் கர்நாடகத்தின் தங்கக் கோவில்


கர்நாடகாவின் சிறந்த சுற்றுலா தளமான கூர்க் பகுதிக்கு செல்பவர்கள் அவசியம் அங்குள்ள திபெத்திய கோவிலுக்கு சென்று பார்க்க வேண்டும். அது நிச்சயம் உங்கள் வாழ்நாளில் ஒரு மாபெரும் அனுபவமாக இருக்கும். மைசூரில் இருந்து குடகின் தலைக்காவிரி உற்பத்தியாகும் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள ஊர்தான் குஷால்நகர்.  இந்த குஷால்நகருக்கு அருகில் உள்ள பைலகுப்பா பகுதியில் இருக்கிறது ஒரு குட்டி திபெத். இங்கு பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள Namdroling Monastry என்ற திபெத்திய கோவிலுக்குள் சென்றால் கிழக்காசிய தேசம் ஒன்றில் இருப்பதைப் போல் இருக்கிறது.

திபெத்துக்கு அடுத்தபடியாக புத்த துறவிகள் அதிகம் இருப்பது இந்த பகுதியில் தான் என்றும் சுமார் 7000 புத்த துறவிகள் இங்கு இருப்பதாகவும் சொல்கிறார்கள். இங்கிருக்கும் புத்த மடாலயங்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்படுகிறது.

திபெத்தியர்கள் இந்தியாவில் குடியேறும்போது பைலகுப்பே பகுதிக்கும் பலர் குடிபெயர்ந்தனர். புத்த சமயத்தை பரப்புவதற்காக  Penor Rinpoche என்பவரால் 1963ஆம் ஆண்டு கூர்க்கில் ஒரு மடம் உருவாக்கப்பட்டு சன்னியாசிகள் மற்றும் துறவிகளுக்கு கல்வி போதிக்கப்பட்டது. இந்த மடத்தின் முழுப் பெயர் "Thekchog Namdrol Shedrub Dargye Ling" சுருக்கமாக "Namdroling".

இங்கு உள்ள 60 அடி உயர தங்க புத்தர் சிலை, பத்மசாம்பவா சிலை, அமித்யாயுஸ் சிலை ஆகியவை தங்க முலாம் பூசப்பட்டு விளக்கு வெளிச்சத்தில் தகதகவென மின்னுகின்றன. நடுவில் இருக்கும் புத்தர் நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவர். வலப்பக்கம் இருக்கும்  பத்மசாம்பசிவா "இரண்டாவது புத்தர் " என்று திபெத்தியர்களால் அழைக்கப்படுகிறார். இவர்தான் புத்த சமயத்தை திபெத் மக்களிடம் பரப்பியவர். இடப்பக்கம் இருக்கும் புத்த அமித்யாயுஸ், அரசராக இருந்து பௌத்த மதத்தை தழுவியவர். இவருடைய சிலையை நிறுவியவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதேபோல இந்த கோவிலின் கோபுரங்களுக்கும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த கோவிலே கெகஜ்ஜோதியாக காட்சியளிக்கிறது.

கோவிலுக்குள் உள்ள சுவர்களில் புத்த மத இதிகாச சம்பவங்களை நினைவு கூறும் பல்வேறு வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு இருப்பது நம்முடைய கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இப்படி ஆர்வமாக கோவிலை சுற்றிப் பார்த்துக் கொண்டே இருக்கும் போது, வழிபாடு செய்யும் நேரம் வந்தது. வழிபாட்டை தொடங்குவதற்கு முன் பச்சை துணி போர்த்தியிருக்கும் மிகப்பெரிய மணியை அடிக்கிறார்கள். சத்தம் கேட்டதும் ஆங்காங்கே குழுமியிருக்கும் துறவிகள் ஒன்று சேர தொடங்குகிறார்கள். வழிபாட்டுக்கு செல்லும் போதே அத்தனை பேரும் வரிசையாக அணிவகுத்து தான் செல்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் நேர்த்தியை கடைபிடிப்பது இங்கிருப்பவர்களின் சிறப்பு.

மணி அடித்ததும் 100க்கணக்கான புத்த துறவிகள் கோவிலுக்குள் வந்து கீழே அமைக்கப்பட்டு இருக்கும் அவரவர் இடத்தில் அமர்ந்து வழிபாட்டை தொடங்குகிறார்கள். அனைவரும் ஒரு சேர தங்கள் முன் வைத்திருக்கும் புனித நூலில் இருக்கும் வரிகளுக்கு ஏற்ப இசையுடன் வழிபாடு நடத்தியது பார்ப்பதற்கே பரவச அனுபவமாக இருந்தது. இந்த வழிபாட்டை நாம் அருகில் இருந்தே பார்க்கலாம். ஆனால் எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. வழிபாட்டின் நடுவே அனைவருக்கும் அருந்துவதற்காக பால் வழங்கப்படுகிறது.

கோவிலை சுற்றிலும் பச்சை பசேலென்று பூங்காவை அமைத்து வெகு அழகாக பராமரித்து வருகிறார்கள். அனைத்தும் அத்தனை நேர்த்தியாக இருக்கிறது.. 

கோவிலுக்கு உள்ளே திபெத்தில் உள்ள PALYUL MONASTRY இன் மினியேச்சரை அமைத்திருக்கிறார்கள். மலை முகட்டில் குட்டி குட்டியாய் வீடுகள் அந்த அழகிற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகு சேர்க்கின்றன. அமைதியை விரும்புவர்கள் இந்த கோவிலுக்கு நிச்சயம் சென்று வாருங்கள். ஆழ்ந்த அமைதியுடன் நானும் என் கணவரும் நிம்மதியாக ரசித்தோம்.

கோவிலுக்கு உள்ளேயே சில கடைகள் இருக்கின்றன. இங்கு பாரம்பரிய திபெத் உடைகள், பொருட்கள், சிலைகள், நகைகள், சந்தன சோப்பு வகைகள், சென்ட் வகைகள் என பல்வேறு பொருட்கள் இருப்பதால் ஆன்மீகத்துடன் சேர்ந்து ஆனந்தமான ஷாப்பிங் அனுபவமும் கிடைக்கிறது.

- ஹேமா ராக்கேஷ்

தந்தி தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர். ஆவணப் பட இயக்குனரும் கூட.. தர்மபுரி தொட்டில் குழந்தைகள் திட்டத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய பூந்தளிர்கள் என்ற ஆவணப்படம் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது. முகநூலில் சாதனை பெண்களை அடையாளப்படுத்த ஆராதனா என்ற பக்கத்தில் பல சாதனை பெண்கள் குறித்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.



Leave a Comment