காரணம் இல்லாமல் இங்கு காரியம் எதுவும் நடப்பது இல்லை


 

ஊழ்வினை காரணமாக , சகுனியின் கள்ள சூதாட்டத்தால் நாட்டை இழந்த பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டிருந்த காலம் . பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் கழிக்க வேண்டிய கட்டாயம் . அதன் பின்னர் ஓர் ஆண்டை யாரும் தங்களை அடையாளம் காண முடியாத அஞ்ஞாத வாசத்தில் கழிக்க வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்து விரைவில் அஞ்ஞாத வாசம் மேற்கொள்ள வேண்டும் .அவர்களுக்கு இருந்த ஒரே தைரியமும் நம்பிக்கையும் கண்ணன் அவர்களுக்கு கொடுத்து வந்த தைரியம் தான் . ஒருநாள், அர்ஜுனன் கண்ணனிடம் , ‘‘கண்ணா! துர்வாச முனிவரைப் போன் றவர்கள் திடீர் திடீர் என்று பலரை சபித்து விடுகிறார்களே? முனிவர்களோ வேறு யாருமோ சபித்தாலும் பாதிப்பு ஏற்படாமல் காத்துக்கொள்ளமுடியாதா?’’ என்று கேட்டான் . ‘‘ஏன் காத்துக்கொள்ள வேண்டும்? சாபம் என்பதுகூட இறைவனின் அருளால் வரமாக கொள்ளலாம் ” என்றான் கண்ணன்.

பாஞ்சாலிக்கு கண்ணனின் பதில் புரியவில்லை . ‘‘ கண்ணா ! வரம்தான் இறைவனின் அருள். சாபம் எப்படி வரமாக இருக்க முடியும் ? ’’ என்றாள் . “முடியும். சாபமே வரமாக மாறும் சந்தர்ப்பங்களும் நேர்வதுண்டு. சாபமோ வரமோ எதுவானாலும் இறைவன் நன்மைக்காக கொடுத்துள்ளான் என்று ஏற்று வாழ்ந்தால் சாபத்தினால் கூட நன்மை காணமுடியும். சாபம் வரமாக மாறும் சந்தர்ப்பம் அர்ஜுனன் வாழ்விலும் நேரலாம். யார் கண்டது?’’ . கண்ணனின் இந்த விளக்கத்தைக் கேட்டுப் பாண்டவர்கள் யோசனையில் ஆழ்ந்தார்கள். போருக்கு இன்னும் ஓராண்டு பாக்கியிருந்த நிலையில் வனவாச காலத்திலேயே இந்திரனிடம்சென்று வலிமையான அஸ்திரங்களைக் கேட்டுப்பெறுமாறு கண்ணன் அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினான்.

 இந்திரனுக்கு உரிய மந்திரத்தை ஜபித்து அர்ஜுன னைப் குந்திதேவி, பெற்றதால் தன் மகனான அர்ஜுனன் கேட்டால் இந்திரன் மறுக்காமல் தேவ அஸ்திரங்களைத் தருவான் என்ற நம்பிகையுடன் அர்ஜுனன் விண்ணுலகம் புறப்பட்டான். தேவ சபையில், தன்னைத் தேடி வந்திருக்கும் அர்ஜுனனைப் பார்த்துப் பூரித்தான் தேவேந்திரன்.மன்மதனும் கண்டு பொறாமைப்படும் பேரழகனாக அர்ஜுனனை பார்த்து பாசம் பொங்கியது இந்திரனுக்கு .

மாவீரனான அர்ஜுனனைப் பார்த்து இந்திர சபையின் பேரழகியான ஒரு நாட்டியக்காரி ஆசை கொண்டாள் . இந்திரனுக்குரியவளான அவளை அடைய ஏராளமானோர் ஏங்கித் தவித்திருக்க அவளோ அர்ஜுனனை அடைய வேண்டும் என்று ஏங்கலானாள் !

அஸ்திரங்களை வாங்கிக்கொண்டு அவன் விடைபெறுவதற்குள் அதற்குள் அவன் மனதில் பிடிக்க எண்ணம் கொண்டாள் .

அன்றிரவு காண்போர் கவரக்கூடிய ஆடையை அணிந்து தன்னை அலங்கரித்துக் கொண்டாள். தன் அழகை நினைத்து கர்வம் கொண்ட அவள் சப்தமெழுப்பாமல் தன் மாளிகையை விட்டு வெளியேறி , அர்ஜுனன் மாளிகை அடைந்தாள் .

 அர்த்த ராத்திரியில் தன்னை தேடி ,வாயிலில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் அவன் உள்ளம் திகைப்பில் ஆழ்ந்தது. அவளின் ஒப்பனையும் அவள் கண்களில் காணப்பட்ட பேராசையும் அவள் எண்ணத்தைப் புரிய வைத்தன. அந்த தேவலோகப் பெண்ணைப் பார்த்ததும் அவன் மனதில் காதலுக்குப் பதில் மரியாதைதான் எழுந்தது.

‘‘தாயே! தாங்கள் யார்? இந்த நள்ளிரவில் என்னைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன?’’ என்று பணிவோடு வினவினான். ‘‘தங்களைவிட வயதில் குறைந்த தோற்றம் காட்டும் என்னைத் தாங்கள் தாய் என அழைப்பது முறையல்ல!’’ என்ற அவள் , மயக்கும் மோகனப் புன்முறுவலோடு ‘‘என்னை ஊர்வசி என்பார்கள். இந்திர சபையில் ரம்பை, திலோத்தமை போல நானும் ஒரு நாட்டியக்காரி என்றாள் . மிகுந்த மதிப்போடு அவளை உள்ளே அழைத்த அவன் ,திடீரென அவள் காலில் விழுந்து வணங்கினான்!

 பதறிய அவள் காலை நகர்த்திக் கொண்டாள். அர்ஜுனன் பணிவோடு பேசலானான் ‘‘அம்மா! தாங்கள் என் தாய்க்கு நிகரல்லவா? தேவேந்திரன் எனக்குத் தந்தை முறையாக வேண்டும் என்றால் தாங்கள் எனக்குத் தாய் தானே?’’ . அர்ஜுனனின் இந்த வார்த்தையைக் கேட்டதும் ஊர்வசியின் விழிகளிலிருந்து அருவி போல் நீர்கொட்டியது. இத்தனை நேரம் மனதில் இருந்த பேராசை இப்போது சீற்றமாக மாறியது . ‘‘உன்னை விட வயதில் குறைந்தவளாகத் தோற்றம் காட்டும் நான் எப்படி உனக்குத் தாய் முறையாக முடியும்? என்று சீறினாள் .


‘‘தாய்ப் பாசத்திற்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்? மகனை விட வயதில் குறைந்த பெண்ணைத் தந்தை இன்னொரு மணம் புரிந்துகொண்டால் அந்த மகனுக்கு அவனை விட இளையவள் தாயாகத் தானே ஆவாள்? தாங்கள் என் தாயாவதும் அப்படித்தான். இவ்வளவு பேரழகுடைய பெண்மணி எனக்குத் தாயாய் இருப்பது குறித்து என் மனம் பெருமை கொள்கிறது தாயே!’’என்றான் அர்ஜுனன் .

 இருசெவிகளையும் கரங்களால் பொத்திக்கொண்ட ஊர்வசி ‘‘மீண்டும் மீண்டும் என்னைத் தாய் என்று சொல்லி அவமானப்படுத்தாதே! நான் உன் மேல் ஆசைகொண்டு உன்னைத் தேடி வந்த பெண். தாய்-மகன் உறவு என்பது இருதரப்பிலும் ஏற்கப்பட வேண்டும். நீ என்னைத் தாய் என்று சொல்வதால் மட்டும் நான் உன் தாயாகி விட மாட்டேன்.’’ . ஆனால் அர்ஜுனன் அமைதியாகவும் உறுதியாகவும் ,‘‘தாயே! உங்கள் உணர்வுகளுக்கு நான் பொறுப்பாக . என் மனநிலையை நான் தெரிவித்தேன். அதில் என்றும் எந்த மாற்றமும் இல்லை ” என்று மீண்டும் அர்ஜுனன் ஊர்வசியின் காலில் விழுந்து வணங்கினான். எரிச்சலடைந்த ஊர்வசியின் விழிகள் இப்போது சீற்றத்தால் சிவந்தன.

 ‘‘ வெட்கத்தை விட்டு உன்னை தேடிவந்த என்னை அவமானப்படுத்திவிட்டாய். ஒரு பெண்ணின் ஆசையை உணராத நீ, பெண்ணாகவும் இல்லாமல் ஆணாகவும் இல்லாமல் இரண்டு தன்மைக்கும் இடைப்பட்ட நிலையை அடைவாய்!’’ என்று சபித்தாள் . தன் துர்ப்பாக்கியமான நிலையை எண்ணி அவன் மனம் வருத்தத்தில் ஆழ்ந்தது. அவன் ஊர்வசியிடம் வேண்டினான், ‘‘தாயே! சற்றே சிந்தித்துப் பாருங்கள். என் நிலை தங்களுக்குப் புரியும். தங்கள் இச்சைக்கு நான் உடன்பட்டால் தாய்க்கு நிகரானவளை அடைந்தேன் என்று சான்றோர் என்னைப் பழிக்கமாட்டார்களா? தங்களுக்கும்தான் அது பெருமையா? அறவழியில் செல்ல நினைத்தவனைச் சபிப்பது எவ்வகையில் தர்மமாகும்? என் நிலை உணர்ந்து எனக்குத் தாங்கள் சாப விமோசனம் அருள வேண்டும்!’’ என்று வேண்டினான் .

ஊர்வசியின் காம உணர்ச்சி அடங்கியதும், அர்ஜுனன் தரப்பில் இருந்த நியாயத்தை அவள் மனம் உணரத் தொடங்கியது. அவள் ஒரு பெரு மூச்சுடன் சொன்னாள்: ‘‘ஆம். நீ சொல்வது சரிதான். ஆனால் சபித்தது சபித்தது தான். அதைச் சபித்தவரே கூட மாற்ற இயலாது. என்றாலும் சாபத்தின் வேகத்தைக் குறைக்க இயலும். நீ உன் வாழ்வில் ஓராண்டு மட்டும் அலித்தன்மை பெறக் கடவாய். அது நீ விரும்புகிற எந்த ஆண்டாக வேண்டுமானாலும் நீயே தேர்வுசெய்து கொள்ளலாம்!’’ என்று விமோசனம் சொன்னாள் ஊர்வசி. தேவேந்திரனிடமிருந்து அஸ்திரங்களைப் பெற்ற அர்ஜுனன் மீண்டும் கானகம் திரும்பினான்.

அர்ஜுனனின் முகத்தில் இருந்த சோகத்திற்கு என்ன காரணம் என வினவினான் கண்ணன். அர்ஜுனன் ஊர்வசியின் சாபத்தைப் பற்றிச் சொன்னான்.கண்ணன் மகிழ்ச்சியு டன் நகைத்ததைக் கண்டு அர்ஜுனனுக்கு வியப்புத் தோன்றியது. ‘‘என்ன கண்ணா உன் முகத்தில் இத்தனை மகிழ்ச்சி? நான் பெற்ற சாபம் உனக்கு ஆனந்தம் தருகிறதா?’’ ‘‘ஆமாம்!’’ உறுதிபடக்கூறிய கண்ணன் விளக்கலானான்.‘‘அர்ஜுனா! பதிமூன்று வருட வனவாச காலத்தில் கடைசி ஓராண்டை நீங்கள் ஆறுபேரும் அஞ்ஞாத வாசமாகக் கழிக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. யாரும் உங்களை அடையாள ம் புரிந்துகொள்ள முடியாமல் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். பெரும் வீரனான நீ மிடுக்கான தோற்றத்தை எவ்விதம் ஒளித்து வாழ்வாய்? ஊர்வசியின் சாபத்தால் நீ அலித்தன்மை அடையும் ஓராண்டாக அந்தக் கடைசி ஆண்டைத் தேர்வு செய்துகொள்.

 உன் தோற்றம், இயல்பு அனைத்தும் மாறும். உன்னை யாராலும் கண்டு பிடிக்க இயலாது! ஊர்வசி கொடுத்தது சாபமல்ல, வரம். நீ அறநெறி தவறாமல் அவளைத் தாயாக ஏற்றாய். அந்த அறநெறி அவள் மனதில்  ஒரு சாபத்தைத் தோற்றுவித்து அதையே உனக்கு வரமாக மாற்றிவிட்டது! அறநெறியில் நடந்தால் இறுதியில் நன்மைதான் உண்டாகும்! சாபமே வரமாக மாறும் சந்தர்ப்பம் உன் வாழ்விலும் நேரலாம் என்று சொன்னேனே? நினைவிருக்கிறதா?’’ இதைக்கேட்டு பாண்டவர் ஐவர் முகத்திலும் பாஞ்சாலி முகத்திலும் மகிழ்ச்சி பரவியது.

வாழ்க்கையில் இறையும் இயற்கையும் எல்லா மனிதர்களுக்கு இப்படி சாபங்களையும், வரங்களையும் அள்ளி அள்ளிக் கொடுக்கின்றது. சாபங்களை வரங்களாக மாற்றிக் கொள்வதும் , வரங்களை சாபங்களாக வீணடித்துக் கொள்வதும் நம் வாழ்க்கை முறையில் தான் உள்ளது. சாபங்களை இறைவன் துணையோடு வரங்களாக மாற்றி வளம் பெறுவோம்…..

 

 



Leave a Comment