புண்ணியம் செய்த சீரடி மண்


சீரடி மண்ணை எவர் ஒருவர் பக்தியுடன் மிதிக்கின்றாரோ அவரது பாவங்கள் அனைத்தும் அவரை விட்டு நீங்கி விடும். என்பது சாய் பாபாவின் சத்திய வாக்கு .

புண்ணிய பூமியாம் பாரத நாட்டில் மகாராஷ்டிரா மாநிலம், கோதாவரி நதிக்கரையில்அமைந்துள்ள சீரடி கிராமம் மிகவும் புண்ணியம் வாய்ந்தது . அங்கு வாழும் மக்கள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள் . பின்னாளில் உலகமே போற்றும் மகான் ஒருவர் மூலம் அந்த கிராமம் ஒரு புண்ணிய ஷேத்திரமாக மாறப் போவதை அப்போது அந்தமக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை .
தன்னை நாடி வந்தோர்க்கு தாயுமானவனாக நின்ற சீரடி சாயியின் தாயும் தகப்பனும் யார் என்று யாருக்கும் தெரியாது . பெற்றோர் பெயர் என்ன ?, சொந்த ஊர் எது?அவரின் இயற்பெயர் தான் என்ன? இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை. சீரடிமக்களுக்கு பாபாவின் அறிமுகமே ஒரு விசித்திர அனுபவம் . கிராமத்தில் இருந்த ஒருமிகப்பழமையான மசூதியின் பின்பக்கம் ஒரு வேப்பமரம் இருந்தது . அதன் அடியில் .ஒரு நாள் தெய்வீக தேஜசுடன் பதினாறு வயது சிறுவன் தியானம் செய்துகொண்டிருந்தான். சிறுவனின் அருள் பொருந்திய முக அழகில் ஈர்க்கப்பட்டனர் அக்கிராமத்து மக்கள் .ஆனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.அவர் எங்கு சென்றார் , எங்கு இருந்தார் என்பதை யாரும் அறியவில்லை.


சாய் பாபாவின் முதல் அற்புதம்

சாந்த் பட்டேல் என்ற வணிகர் ஒருவர் காட்டு வழியில் சென்று கொண்டிருந்தபோது,பாபாவை கண்டார். பாபா அவரிடம் இளைப்பாறும்படி கூறினார். அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்தது. பாபா தன் கையிலிருந்தகத்தியால் நிலத்தை தோண்ட நெருப்பு வந்தது. பிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது. பேச்சின் நடுவே சாந்த் பட்டேலின் குதிரை காணமல் போனதையும் பாபா அறிந்துக் கொண்டார் . காணாமல் போன குதிரை இருக்கும் இடத்தையும் பாபா கூறினார். அவர் சொன்ன இடத்தில் குதிரையை கண்டெடுத்த சாந்த் பட்டேல் , பாபாவின் மகிமையை புரிந்து கொண்டார். சாந்த் பட்டேல்,பாபாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். சில நாட்கள் தன் வீட்டிலேயே தன்னுடனையே பாபாவைத் தங்க வைத்து உபசரித்தார்.
சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக சீரடி சென்றபோது,பாபாவையும் தன்னுடன் சீரடிக்கு அழைத்து சென்றார். கந்தோபா எனும் ஆலயத்தின் பூசாரி மகால்சாபதி , பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தைக் கண்டு அவரை சாய் என்று அழைத்தார். சாய் என்றால் பாரசீகத்தில் சுவாமி என்று பொருள் . சீரடி மக்கள்பாபா என்று அழைக்க இரண்டும் சேர்ந்து `சாய்பாபா’ என்ற திருப்பெயரேநிலைத்துவிட்டது.


வேப்ப மரமே குரு

சீரடியிலேயே தங்கிவிட தீர்மானித்த பாபா சீரடியில் பழமையான மசூதி அருகிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்தார். பாபா அமர்ந்திருந்த வேப்பமரத்தின் இலைகளில் அதன் இயல்பான கசப்புச்சுவை மாறியது. மாறியது வேப்ப மரத்தின் கசப்பு மட்டுமா , சீரடி மக்களின் வாழ்க்கை முறையும் தான் . பாபா தனது வழக்கமான வேப்பமரத்தை விட்டு வேறு ஒரு இடத்திலும் அமர மறுப்பதைக் கண்ட அந்த ஊர் மக்கள் அது பற்றி அவரிடமே கேட்டார்கள். அதற்கு இந்த வேப்பமரமே தனது குருஎன்று பதில் கூறினார். பின் அந்த மரத்தினடியில் ஒரு இடத்தைக் காட்டி அந்தஇடத்தைத் தோண்டச் சொன்னார். சிறிது ஆழம் தோண்டியதும் அங்கு உள்ளே ஒருசிறு அறையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் அந்த ஊர்மக்கள் மெய் சிலிர்த்து போனார்கள். தெய்வாம்சம் பொருந்திய அவரை , தங்கள் வாழ்க்கையை உய்விக்க வந்த தெய்வமாகவே கருதினார்கள் அவரின் அற்புதங்கள் பல சீரடி மண்ணில் அரங்கேற தொடங்கியது . சாய்பாபா அந்த கிராமத்து மக்களுள் ஒருவராக மாறி அவர்களை நேசிக்க துவங்கினார் . அவரின் பெருமைகள் சீரடியையும் தாண்டி மணம் பரப்ப துவங்க பல ஊரிலிருந்தும் மக்கள் அவரின் பாதம் பணிந்துதங்கள் துயர் நீங்க சீரடிக்கு வரத் துவங்கினார்கள்.



Leave a Comment