காஞ்சி சங்கராச்சாரியாருக்கு சொர்ணபாத பூஜை


தஞ்சையில் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு 1,000 தங்ககாசுகளால் சொர்ணபாத பூஜையை விஜயேந்திரர் செய்து வைத்தார்.
தஞ்சை மேலவீதியில் உள்ள பங்காரு காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் பீடத்துக்கு வந்து 63 ஆண்டுகள் முடிந்து 64-ம் ஆண்டு தொடங்குவதையொட்டி சொர்ணபாத பூஜை தஞ்சை மேலவீதியில் உள்ள பங்காருகாமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதையடுத்து தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரியகோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், திங்களூர் கோவில், திட்டை கோவில், ஆலங்குடி கோவில், திருவிடைமருதூர் கோவில், திருக்கொல்லிக்காடு, தஞ்சை அரண்மனை தேவஸ்தான கோவில், திருக்கருக்காவூர், ஸ்ரீரங்கம், திருக்கடையூர், எட்டுக்குடி, எண்கண், திருவானைக்காவல் உள்ளிட்ட கோவில்களில் இருந்து பிரசாதம் கொண்டுவரப்பட்டு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகளுக்கு வழங்கப்பட்டன.

பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகளுக்கு 1,000 தங்க காசுகளால் சொர்ணபாத பூஜையை, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள், “இந்து மதம் வளர நாம் அனைவரும் பாடுபட வேண்டும்”என்றார். அதன் பின்னர் அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.



Leave a Comment