திருவண்ணாமலை கோவில் மண்டல பூஜை


திருவண்ணாமலை கோவிலில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு விழா மார்ச் 25-ந்தேதி நடக்கிறது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 6-ந்தேதி நடந்ததை அடுத்து 48 நாள் மண்டல பூஜை நிறைவு விழா மார்ச் 25-ந்தேதி நடக்கிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 48 நாள் மண்டல பூஜை 25-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
நிறைவு நாளான்று காலையில் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் மாலையில் சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து மார்ச் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உச்சிக்கால பூஜையின்போது அனைத்து பரிவார சன்னதிகளிலும் கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை 6 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், சந்திரசேகரர் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

கோவில் கும்பாபிஷேகத்தை நேரில் காணாதவர்கள் மண்டல பூஜை நிறைவு விழாவில் பங்கேற்றால், கும்பாபிஷேகத்தை நேரில் கண்டதற்கு ஈடான பலன் கிடைக்கும் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.



Leave a Comment