காளஹஸ்தி கோயிலில் திருக்கல்யாணம் உற்சவம்....


காளஹஸ்தி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கடந்த 20-ஆம் தேதி முதல் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் 8-ஆம் நாள் ஆனந்த ராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. அதனால் நேற்று அதிகாலை 3 மணிக்கு காளஹஸ்தீஸ்வரரை யானை வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகையை சிம்ம வாகனத்திலும் எழுந்தருளச் செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையடுத்து காளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகையும் தனித்தனியாக ருத்ராக்ஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தனர். வாகன சேவையின்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருக்கல்யாணம் தொடங்கியது முதல் உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்து கோயிலை அடையும் வரை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ள சந்நிதி நடைகள் சாத்தப்பட்டு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. அன்றைய தினம் ஆனந்த ராத்திரி என்பதால் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜ சுவாமியையும், சிவகாமசுந்திரி அம்மனையும் கோயிலுக்குள் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் மாலை 6 மணிக்கு எழுந்தருளச் செய்தனர். அவர்கள் இருவருக்கும் இரவு 8 மணிக்கு சபாபதி திருக்கல்யாணம் நடைபெற்றது. நடராஜரை சபாபதி என்று அழைப்பதால் இந்த கல்யாண உற்சவத்துக்கு சபாபதி திருக்கல்யாணம் என அழைக்கின்றனர். கல்யாண உற்சவத்துக்கு வந்த பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.



Leave a Comment