சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?


தானத்தில் சிறந்தது அன்னதானம்....
ஒருவனுக்கு எதைக் கொடுத்தாலும் போதும் என்று சொல்லும் மனம் வராது. ஆனால், சோறு எனப்படும் அன்னம் மட்டுமே போதும் என்று சொல்ல வைக்கும்.... நாம் உண்ணும் உணவிற்கும் நம் எண்ணத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?


சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக வேதத்திலே கூறப்பட்டுள்ளது.
அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள். அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.
ஐப்பசி மாத முழுநிலவு நாளில் அஸ்வினி நட்சத்திரம் கூடி வரும் வேளையில் உலகெங்கும் உள்ள சிவ ஆலயங்களில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது மரபு.
ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் ஒவ்வொரு அபிஷேகம் சிறப்பாகும். ஐப்பசி மாத பவுர்ணமியில் உலகம் முழுவதையும் காத்து படி அளக்கும் சொக்கநாத பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது மிகச்சிறப்பாகும்.
பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.
அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.
இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.
அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.


அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகிறது?
ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். இது அன்னாபிஷேகம் எனப்படுகின்றது.
இவ்வளவு மகிமை வாய்ந்த அன்னாபிஷேகம் நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாது அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறைவனின் அன்னாபிஷேக கோலத்தை தரிசித்து மகிழுங்கள்! இறையருள் பெறுங்கள்!



Leave a Comment